Pages

Monday, July 15, 2013

தாயுமானவர் - என் போல் ஒரு பாவி

தாயுமானவர் - என் போல் ஒரு பாவி 


வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றின் மேல் ஆசை கொள்கிறோம்.

மிட்டாய், பொம்மை, புத்தகம், படிப்பு, வேலை, எதிர் பாலினர் மேல் கவர்ச்சி, பணம், சொத்து, புகழ் , பதவி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டே இருக்கிறோம்.

அந்த கால கட்டத்தை தாண்டி வரும் போது, முன்னால் ஆசைப் பட்டது எல்லாம் சிறு பிள்ளைத் தனமாய் தெரிகிறது.

இதுக்கா இவ்வளவு ஆசைப் பட்டோம் என்று நம்மை நாமே பார்த்து சிரித்துக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஆசை விடுவது இல்லை. எல்லாம் பொய் என்று அறிந்தும் விட மனமில்லை

தாயுமானவர் உருகுகிறார்

இறைவா, நீ படைத்த எத்தனையோ உயிர்களில் என்னைப் போல் ஒரு பாவி உண்டா ? உடம்பால் செய்த உலகம் பொய் என்று அறிந்தும் ஒன்றையும் எள்ளளவும் துறக்காமல் இருப்பவர் எங்கேனும் உண்டா ?

பாடல்

உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல்
ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக்
கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக்
காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 

சீர் பிரித்த பின்

உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் 
ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யாக் 
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி 
காசினிக்குள் அலைந்தவர் யார் காட்டாய் தேவே 

பொருள்





உண்டோ = உண்டா ?

 நீ படைத்த உயிர் திரளில் = நீ படைத்த உயிர்களில்

என் போல் = என்னைப் போல

ஒரு பாவி = ஒரு பாவி

தேகாதி = உடம்பை பிரதானமாகக் கொண்ட

உலகம் பொய்யாக் = உலகை பொய்யாகக்

கண்டேயும் = கண்ட பின்னும்

எள்ளளவும் துறவும் இன்றி = கொஞ்சம் கூட துறவு இன்றி

காசினிக்குள் = இந்த உலகத்தில்

அலைந்தவர் யார் = அலைந்தவர் யார்

காட்டாய் தேவே = காட்டாய் தேவனே

பொய் என்று தெரிந்த பின்னும், மனம் விட மாட்டேன் என்கிறதே. 


1 comment:

  1. பல பாடல்களில், "உடம்பினால் வரும் துன்பம்" என்ற கருத்து வருகிறது. அதாவது, காமத் துன்பம் என்பதே எல்லோருக்கும், வெல்ல முடியாத சவாலாய் இருந்திருக்கிறது. பணம், பதவி, மற்றவர் மேல் ஆளுமை (power) எல்லாம் கசந்து போனாலும், காமத்தை வெல்வதுதான் உச்ச கட்ட சவாலாக இருந்திருக்கிறது. இந்தப் பாடலிலும், "தேகாதி" என்ற சொல் அதையே எனக்கு நினைவுபடுத்துகிறது.

    பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலமாக, நம் உடம்பில் ஊறிப் போனது, evolution-ஆல் வளர்க்கப் பட்டிருப்பது காமமும், குல விருத்தியும் (reproduction) தானே!

    ReplyDelete