Pages

Monday, July 8, 2013

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும்

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும் 


குசேலருக்கு எல்லாம் கண்ணனாகத் தெரிகிறது.  கடலைப் பார்க்கிறார். அது கண்ணனாகவே தெரிகிறது.

எப்படி ?

கடலில் சங்கு இருக்கிறது, அதன் கரைகளில் தங்கிய நீர் நிலைகளில் குவளை மலர்கள் இருக்கிறது, ஆமையும் மீனுமாகி உயிர்களை காக்கிறது, சிவந்த பவளம் இருக்கிறது, அதன் அடியில் பொன் இருக்கிறது, குளிர்ச்சி இருக்கிறது, கருமை நிறமாக இருக்கிறது, மேகமாகப் பொழிகிறது.....

இது எல்லாம் கண்ணன் தானே .....கண்ணனிடமும் சக்கரம் இருக்கிறது, அவன் நாபிக் கமலத்தில் இருந்து தாமரை மலர் பூத்தது, மச்ச அவதாரமும், கூர்ம அவதாரமும் எடுத்து உயிர்களை காத்தான், அவன் அதரம் சிவந்த நிறம் பவளம் போல், பொன் போன்ற திருமகளை அணைத்தவன், கருமை நிறத்தவன், தன் அருளை மேகம் போல் பொழிபவன் ....

பாடல்

சீருறு சங்கம் வாய்ந்து
          செழுங்குவ லயமுண் டாக்கி
     ஓருறு கமடம் மீனம்
          உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி
     ஏருறு பவளச் செவ்வாய்
          இயைந்துபொன் புணர்ந்து தண்ணென்
     காருறு நிறமுங் காட்டிக்
          கண்ணனைத் துணையும் வாரி.


பொருள் 

சீருறு சங்கம் வாய்ந்து =  சிறப்பான சங்கை கொண்டு

செழுங்குவ லயமுண் டாக்கி = செழுமையான குவளை மலர்களை உண்டாக்கி

ஓருறு கமடம் மீனம் = (ஆராயும் போது , ஆமை மீன்

உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி = உருவம் கொண்டு உயிர்களைக்  காத்து

ஏருறு பவளச் செவ்வாய் =  அழகான பவளம் போன்ற சிவந்த வாய் (கபெற்ற)

இயைந்துபொன் புணர்ந்து  = பொன்னை தானுள் கொண்டு, பொன் போன்ற திருமகளைப் புணர்ந்து

 தண்ணென் காருறு நிறமுங் காட்டிக் = குளிர்ச்சியான கருமையான நிறத்தை காட்டி

கண்ணனைத் துணையும் வாரி = கண்ணன் போல் துணை புரியும் மழை



2 comments:

  1. இந்த குசேலோபாக்கியானப் பாடல்கள் தேவராசப்பிள்ளை அவர்கள் எழுதியதா ?

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவர் முழுப் பெயர் வல்லூர் தேவராச பிள்ளை

      Delete