Pages

Monday, July 8, 2013

ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்

ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்


ஜடாயு மேலும் இராவணனிடம் சொல்லுவான்....

கோபம் கொண்டு வரும் யானை மேல் மண் உருண்டையை எடுத்து எரிவதையா நீ விரும்புகிறாய் ? அது உன்னை கொல்லும் என்று நீ அறியவில்லையா ? விஷத்தை தெரியாமல் உண்டாலும் அது கொல்லாமல் விடுமா.

பாடல்

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல் 
விடும் உண்டை கடாவ விரும்பினையே? 
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன் 
கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்!

பொருள்




கொடு = கொடுமையான

வெங் கரி = வெம்மையான யானை

கொல்லிய = கொல்வதற்காக

வந்ததன்மேல் = வந்த போது அதன் மேல்

விடும் உண்டை கடாவ விரும்பினையே? = மண் உருண்டையை எறிய
விரும்பினாயா

அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் = அது உன்னை கொல்லும் என்று நீ அறியவில்லை போலும்

வன்  கடு = கடுமையான விஷத்தை

உண்டு = உண்டு

உயிரின் நிலை காணுதியால் = உயிர் நிலைத்து இருக்குமா என்று காண விரும்புகிறாயா ?

தேவர்களை நீ துன்புறுத்துவதால் இராமன் உன்மேல் ஏற்கனவே கோபம் கொண்டு இருக்கிறான். அப்படி உன்மேல் கோபம் கொண்டு வரும் இராமனின்  மனைவியை கவர்ந்து செல்வது, கோபத்தோடு வரும் யானை மேல் மண் உருண்டையை  எறிவது போலாகும்.

மேலும், நீ சீதையை தூக்கிச் செல்லுவது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா ?தெரியாமல் உண்டால் கூட  விஷம் கொல்லமால் விடுமா ?


No comments:

Post a Comment