Pages

Saturday, July 27, 2013

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

இராமாயணம் - இராவணின் துன்பம் 



சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் 
மேயவள் மணி நிற மேனி காணுதற்கு 
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் 
ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான்.


கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன்  சீதை இருக்கும் இடம் தேடி வருகிறான்.

அவள் அழகைக் காண்கிறான்.

பிரமிக்கிறான். இப்படி ஒரு அழகா ? இப்படி ஒரு நிறமா ?

எவ்வளவோ தவம் செய்து என்னன்னவோ வரம் எல்லாம் வாங்கினோமே, ஆயிரம் கண் வேண்டும் என்று ஒரு வரமும் வாங்கி இருக்கலாமே. இந்த இருபது கண்கள் பத்தாதே இவள் அழகைக் காண என்று மனம் நொந்தான்.


சேயிதழ்த் = சிவந்த இதழ்களை கொண்ட

தாமரைச் = தாமரை மலரின்

சேக்கை = சேர்க்கை

தீர்ந்து = விடுத்து

இவண் மேயவள் = இங்கு வந்தவள் (அதாவது திருமகள் )

மணி நிற மேனி காணுதற்கு = மணி போல் ஒளி பொருந்திய இவள் உடலை காண்பதற்கு

ஏயுமே இருபது? = இருபது கண்கள் போதுமா ? (போதாது )

 இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்  = இமைக்காத கண்கள் . நாட்டம் என்றால் கண்.

ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான் = ஆயிரம் இல்லையே என்று துன்பப் பட்டான்.


இது நேரடியான அர்த்தம். இப்படித்தான் பலரும் எழுதி இருக்கிறார்கள். நான் கொஞ்சம் வேறு  விதமாக யோசித்துப் பார்த்தேன்.

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

என்றால் என்ன ?

சிவந்த தாமரை மலரை விட்டு இங்கு வந்தவள்.

மற்றொரு சிந்தனை.

தாமரை மலரை விட்டு இங்கு இவளிடம் வந்தவை. அவை என்ன ?

தாமரை மலருக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் - சிவந்த நிறம், மேன்மை, குளிர்ச்சி, நறுமணம், சூரியனை கண்டதும் மலரும் இயல்பு...போன்றவை....

இந்த குணங்கள் எல்லாம் தாமரை மலரின் சேர்க்கையை விட்டு இங்கு வந்து விட்டன  (சீதையிடம்).

சீதை அன்றலர்ந்த தாமரை மலர் போல் சிவந்து இருக்கிறாள், குளிர்ந்து இருக்கிறாள், மென்மையாக இருக்கிறாள்.

மேலும், இராமன் என்ற சூரியன் தவிர வேறு யாருக்கும் மலராத கற்பின் கனலி அவள்.

சீதை தாமரை மலர் போல் இருக்கிறாள் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் தாமரையின்  குணங்கள் எல்லாம் சீதையிடம் வந்து விட்டது.

இனி அவள் தான் அவளுக்கு உதாரணம். தனக்கு உவமை இல்லாதவள்

இப்படியும் யோசிக்க இடம் இருக்கிறது. 

ஆயிரம் கண் இல்லையே என்று இராவணன் வருத்தப் பட்டான்.

அப்படி வருத்தப் பட்ட இன்னொருவர் இருக்கிறார். ஆயிரம் கண் அல்ல, நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று வருந்தினார் அவர். 

அவர் யார் தெரியுமா ?




1 comment:

  1. இராவணனின் காமத்தைச் சொல்லும் பாடல்கள் இத்தனை இருப்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். அருமையான பாடல்கள். நன்றி.

    ReplyDelete