Pages

Sunday, August 25, 2013

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை 




வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.

நிறைய நல்ல விஷயங்களை நாளை செய்வோம், நாளை செய்வோம்  என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். நாளை வருமா ? வரும்போது நமக்கு நினைவு இருக்குமா ?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார்  வள்ளுவர். அன்னைக்கு செய்துக் கொள்ளலாம் என்று . இருக்கக் கூடாது.  எப்போதும் அற வழியில் நிற்க வேண்டும் என்றார். 

கர்ணன் இறக்கும் தருவாயில் சொல்கிறான்...."கண்ணா, இறக்கும் தருணத்தில்   உன் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன், உன்னால் மதிகப் பெற்றேன், உன்  கைகளால் தீண்டப் பெற்றேன், உன் நாமத்தை உரைக்கும்  பேறு பெற்றேன்...இந்தப் பேறு உலகில் யாருக்கு கிடைக்கும் " என்றான். 

நினைத்துப் பாருங்கள்.  மரணம் நம்மிடம் சொல்லிவிட்டா வருகிறது. என்று , எப்படி வரும் என்று  நமக்குத் தெரியாது. 

அப்புறம் செய்யலாம் என்று நினைத்தது எல்லாம் அப் புறம் போய் விடும். கர்ணனுக்கு  இறக்கும் தருவாயில் இறைவனின் தரிசனம் கிடைத்தது, அவன் பெயரை சொல்லும்  புண்ணியம் இருந்தது, அவன் திருவடிகளைத் தொழ அவகாசம் இருந்தது, கிருஷ்ணனே அவனைத் தொட்டு அனுக்ரஹம் பண்ணினான்....

அதற்கு காரணம் அவன் செய்த கொடை , அவன் செய்த தர்மம்...மங்காத புகழையும் , முக்தியையும் கொடுத்தது....

பாடல் 


வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.


சீர் பிரித்த பின் 


வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப் பெற்றேன் மதி பெற்ற
             திரு உள்ளத்தால் தான் மதிக்கப் பெற்றேன்,
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப  மார்பும் 
             திருப்புயமும் தை வந்து தீண்டப் பெற்றேன் ,
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்து உணர்வுடன் உன் திரு 
             நாமம் உரைக்க பெற்றேன்,
யான் பெற்ற பெருந்தவப் பேற்றை என்னை அன்றி இரு நிலத்தில் 
             பிறந்தோரில் யார் பெற்றாரே 


பொருள்






வான் பெற்ற நதி = ஆகாய கங்கை

கமழ் தாள் = அந்த நதியால் நீராட்டப் பெற்ற உன் திருவடிகளை

வணங்கப் பெற்றேன் = வணங்கப் பெற்றேன்

 மதி பெற்ற = நிலவை தோன்றவைத்த

திரு உள்ளத்தால் = உன்னுடைய திரு உள்ளத்தால்

 தான் மதிக்கப் பெற்றேன் = மதிக்கப் பெற்றேன். திருமாலே அவனை மதித்தான்

தேன் பெற்ற = தேன் உள்ள

துழாய் = துழாய் மலரை கொண்ட

அலங்கல் = மாலை அணிந்த

 களப  மார்பும்  = சந்தனம் போன்ற கலவைகளை  பூசிய உன் மார்பும்

திருப்புயமும் = உன்னுடைய திருக் கரங்களும்

தை வந்து தீண்டப் பெற்றேன் = என்னை வந்து தீண்டப் பெற்றேன்

ஊன் பெற்ற பகழியினால் = பழி என்றால்  அம்பு.பகைவர்களின் ஊன் (சதை) ஒட்டிக் கொண்டிருக்கும் அம்பினால் (அர்ஜுனனின்)

அழிந்து வீழ்ந்து = அழிந்து வீழ்ந்து

உணர்வுடன் = உணர்வுடன். ஏனோ தானோ என்று இல்லை...பக்தி உணர்வுடன்

உன் திரு நாமம் உரைக்க பெற்றேன் = உன் திரு நாமத்தை உரைக்கப் பெற்றேன்

யான் பெற்ற பெருந்தவப் பேற்றை = நான் பெற்ற இந்த தவப் பேற்றை

என்னை அன்றி = என்னைத் தவிர

இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே = இந்த உலகில் வேறு யார் பெற்றார்கள்.


காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்று புலம்பினார் பட்டினத்தார் 


இறக்கும் தருணத்தில் கண் பஞ்சடையும், நாக்கு குழறும், கை கால்கள் விழுந்து விடும், நினைவு தவறும்....

இத்தனையும் சரியாக இருந்து, உணர்வும் (மனமும்) சரியாக இருந்து இறைவனை நினைக்கும் பேறும் பெற்றான் கர்ணன்....

4 comments:

  1. Superb poem. wonderful personality. Awesome explanation. Beautiful. Thanks for bringing such wonderful poems for us.

    ReplyDelete
  2. எவ்வளவோ கஷ்டங்கள் வாழ்க்கையில் சந்தித்தாலும், இறக்கும் தருவாயில் நல்லதை நினைப்பது ஆச்சரியமே. ஐயோ, இதைச் செய்யவில்லையே, அதைச் செய்யவில்லையே என்று இறக்கும்போதும் அழாமல், அமைதியுடன் இறப்பது ஒரு பெரிய விஷயம்தான்.

    பாடலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வியாசர் பெருமானே அறிவென்றால் நீரே உங்களை வணங்குகிறேன்

    ReplyDelete