Pages

Saturday, August 24, 2013

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல்

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல் 


சாகும் தருவாயில், எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று கூறாமல் இருக்கும் வரம் என்று கண்ணனிடம் கேட்டான். கண்ணனும் மகிழ்ந்து அந்த வரத்தை  தந்தான். பின் அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டினனான்.

கர்ணன் இறக்கும் செய்தி குந்திக்கு அசரீரி மூலம் தெரிய வந்தது.

கர்ணன், குந்தியிடம் வரம் வாங்கி இருந்தான், தான் சாகும் முன்னம், அவள் தன்னை அவள் மடியில் ஏந்தி பிள்ளை போல் அமுது ஊட்ட வேண்டும் என்று.

மனதை உருக்கும் அந்தப் பாடல்


என்றென்றே யமர்க்களத்தி னின்ற வேந்தர் யாவருங்
                   கேட் டதிசயிப்ப வேங்கி யேங்கி,
யன்றன்போ டெடுத்தணைத்து முலைக்க ணூற
               லமுதூட்டி நேயமுட னணித்தா வீன்ற,
கன்றெஞ்ச வினைந்தினைந்துமறுகா நின்ற கபிலையைப்போ
                      லென்பட்டாள் கலாபம் வீசிக்,
குன்றெங்கு மிளஞ்சாயன் மயில்க ளாடுங் குருநாடன்
                           றிருத்தேவி குந்திதேவி..

சீர் பிரித்த பின்


என்றென்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் 
கேட்டு அதிசயிப்ப ஏங்கி ஏங்கி 
அன்போடு எடுத்து அணைத்து முலைக் கண் ஊற 
அமுது ஊட்டி நேயமுடன் ஆ ஈன்ற 
கன்று ஏஞ்ச இனைத்து இனைந்து மறுகா நின்ற கபிலையைப் போல் 
எனப் பட்டாள் கபலாம் வீசி 
குன்று எங்கும் இளம் மஞ்சு சாயல் மயில்கள் ஆடும் குருநாடன் 
திருத்தேவி குந்திதேவி 

பொருள்




என்றென்றே = என்ன என்ன என்று 

 அமர் களத்தில்= போர்க் களத்தில்

நின்ற வேந்தர் யாவரும் = நின்ற அரசர்கள் யாவரும்

கேட்டு அதிசயிப்ப = கேட்டு அதிசையப்ப. இதுவரை கர்ணன் குந்தியின் மகன் என்று யாருக்கும் தெரியாது. அதனால் பெரிய அதிசயம்


ஏங்கி ஏங்கி = மகனுக்காக ஏங்கி ஏங்கி

அன்போடு எடுத்து = அன்போடு அவனை மடியில் எடுத்து

அணைத்து = அணைத்து

 முலைக் கண் ஊற = மார்பில் பால் ஊற

அமுது ஊட்டி = அந்த அமுதை ஊட்டி


நேயமுடன் = அன்புடன்

 ஆ ஈன்ற  = பசு, அப்போதுதான் ஈன்ற

கன்று ஏஞ்ச = கன்றுக்காக ஏங்கி

 இனைத்து இனைந்து = நினைத்து நினைத்து

 மறுகா நின்ற கபிலையைப் போல்  = மறுகி நிற்கும் பசுவைப் போல

எனப் பட்டாள் = அதுபோல் இருந்தாள் ...யார் ?

 கபலாம் வீசி  = தோகையை வீசி

குன்று எங்கும் = மலைகள் எங்கும்

இளம் மஞ்சு சாயல் மயில்கள் = இளமையான மேகம் போல் மிதக்கும் மயில்கள்

ஆடும் = ஆடும்

குருநாடன் = குரு நாட்டின்
 
திருத்தேவி குந்திதேவி = மூத்த மனைவி, குந்தி தேவி

அன்பின் மிகுதியால், காலம் அல்லாத காலத்திலும் அவளுக்கு மார்பு வழி பால் சுரந்தது.

கம்ப இராமாயணத்தில் சுமித்திரை, இலக்குவனை கானகம் போகச் சொன்ன பின், அவள் முலை சோர நின்றாள் என்பான் கம்பன்.

பாரதம், வாழ் நாள் முழுவதும் படிக்க வேண்டிய நூல்....நேரம் கிடைத்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள். அதன் சுவையே தனி.




1 comment:

  1. மீண்டும் என் கண்களில் கண்ணீர்!

    ReplyDelete