Pages

Saturday, August 24, 2013

திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில்

திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில் 


 நாம்: ஐயா, வணக்கம். இந்த அறம் அறம் அப்படின்னு சொல்றாங்களே, அப்படினா என்ன ?

வள்ளுவர்: அதைத்தானே இந்த திருக்குறளில் சொல்லி இருக்கேன். படித்துப் பாரு...

நாம்: ஐயா, இந்த 1330 குறளையும் படித்து, அதுக்கு அர்த்தம் புரிஞ்சு...ரொம்ப நாள் ....ஆகும் போல இருக்கே...சட்டுன்னு, எளிமையா புரியும்படி சொல்லுங்களேன்...

வள்ளுவர்: அப்படியா...சரி...உனக்கு...சுருக்கமா அறம் அப்படினா என்னனு தெரியனும் அவ்வளவு தானே....

நாம்: ஆமாங்க ஐயா...

வள்ளுவர்: சரி சொல்றேன் கேட்டுக்கோ ... இரண்டே வரியில் சொல்றதுனா

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

நாம்: அப்படினா என்னங்க ஐயா ?


வள்ளுவர்: மனசுல ஒரு குற்றமும் இல்லாட்டி, அதுவே எல்லா அறமும் செய்த மாதிரிதான்.

நாம்: புரியலேயே ஐயா...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

வள்ளுவர்: எல்லா குற்றங்களும், அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின் தான் வாக்கும்  செயலும்  அதை செயல்படுத்துகிறது.  நினைக்காத ஒன்றை பேசவோ செய்யவோ முடியாது அல்லவா ?

நாம்: ஆம்...

வள்ளுவர்:  எனவே,மனதில் மாசு, அதாவது, குற்றம் இல்லை இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.

நாம்: சரிதான் ஐயா ...ஆகுல நீர பிற என்று சொல்லி இருக்கிறீர்களே, அது என்ன ?


வள்ளுவர்: ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள். நீர என்றால் தன்மை உடைய என்று பொருள். பிற என்றால் மற்றவை.


நாம்: கொஞ்சம் விளக்க முடியுமா ?


வள்ளுவர்:  ஒருவன் மனதில் மாசை, அதாவது குற்றத்தை வைத்துக் கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக் குற்றத்தை மறைக்க செய்ததாகும். ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம், பகட்டு, விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.

மனதில் மாசு இல்லாதவன், விளம்பரம் வேண்டும் என்று கூட நினைக்க மாட்டான்...அவனிடம் ஒழுக்கம் இருக்கும், அன்பு இருக்கும், இரக்கம் இருக்கும், வேண்டாத படோபாடம் இருக்காது.

-------------------------------------

மனம் தான் எல்லாவற்றிற்கும் மூலம்.


விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி,

என்பார் மாணிக்க வாசகர்.  மனம் விலங்கு போன்றது.  நல்லது கெட்டது தெரியாது.  சுயநலம் கொண்டது.

2 comments:

  1. இப்போதுதான் இதே குறளைக் குறிப்பிட்டு ஒரு பதிவிற்காக எழுதினேன்! மிக நன்று. நன்றி!

    ReplyDelete
  2. இந்தத் திருக்குறள் எவ்வளவு பிரபலமானதானாலும், இப்போதுதான் அதன் பொருள் தெரிந்தது. நன்றி.

    ReplyDelete