Pages

Thursday, August 22, 2013

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


பதினேழாவது நாள் போரில் கர்ணன் சண்டையிட்டு சோர்ந்து விழுகிறான். அப்போது கண்ணன் ஒரு வேதியர் உருவில் வந்து கர்ணனின் அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்றுக் கொள்கிறான். கர்ணனும் அதை மகிழ்வோடு தானமாக தருகிறான்.

பெற்றுக் கொண்டபின், கண்ணன் "உனக்கு வேண்டிய வரம் கேள் " என்று கூறுகிறான்.

கர்ணன் ஒரு வரம் கேட்கிறான்.

நாமாக இருந்தால் சொர்க்கம் வேண்டும் என்று கேட்ப்போம், இறைவன் திருவடி வேண்டும் என்றும் கேட்போம், பிறவா வரம் வேண்டும் என்று கேட்போம்...

கர்ணன் கேட்ட வரம்...."என்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நானும் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் இதயம் தா " என்று கேட்கிறான்.

அவன் வரம் கேட்ட இடம் - தாய்க்கு மகன் இல்லை என்று ஆகி, தம்பிகளுக்கு அண்ணன் இல்லை என்று ஆகி, தவறு என்று தெரிந்தும் செஞ்சோற்று கடன் கழிக்க துரியோதனன் பின் போய் , பரசுராமனிடம் கற்ற வித்தையெல்லாம் மறந்து போய் , தாய் கேட்ட வரத்தால் அர்ஜுனனை கொல்லாமல் விட்டு, செய்த புண்ணியத்தை எல்லாம் தானமாகக் கொடுத்து விட்டு, அடி பட்டு, உயிர் போகும் நேரம்....

அவன் மனம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும்....சாகும் போதும் மற்றவர்கள் மேல் கருணை.

பாடல்

மல்லலந்தொடையனிருபனைமுனிவன்மகிழ்ந்துநீவேண்டிய
                                       வரங்கள்,
சொல்லுகவுனக்குத்தருதுமென்றுரைப்பச்சூரன்மாமதலையுஞ்
                                     சொல்வான்,
அல்லல்வெவ்வினையாலின்னமுற்பவமுண்டாயினுமேழெழு
                                         பிறப்பு,
மில்லையென்றிரப்போர்க்கில்லையென்றுரையாவிதயநீயளித்

                                   தருளென்றான்.

சீர் பிரிக்காமல் புரிந்து கொள்வது கடினம்

மல்லல் அம்  தொடை அணி நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் 

சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் 

அல்லல் வெவ் வினையால் இன்னமும் உற்பவம் உண்டாயினும் ஏழேழு பிறப்பும் 

இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்து அருள் என்றான் 



பொருள்





மல்லல் = வளப்பமான

அம் = அழகிய

தொடை = மாலை (யை)

அணி = அணிந்த 

நிருபனை = தலைவனை, அரசனை 

முனிவன் = முனிவன் (வேடத்தில் இருந்த கிருஷ்ணன்)

மகிழ்ந்து = மகிழ்ந்து

 நீ வேண்டிய வரங்கள் = உனக்கு வேண்டிய வரங்களை 

சொல்லுக = கேள்

உனக்குத் தருதும் = உனக்கு தருவேன்

என்று உரைப்ப = என்று சொல்ல

சூரன் = சூரியனின்

மா மதலையும் = வீரப் புதல்வனும்

சொல்வான்  = சொல்வான்

அல்லல் = துன்பத்தைத் தரும்

வெவ் வினையால் = கொடிய வினைகளால்

இன்னமும் = இன்னமும்

உற்பவம் = உற்பத்தி, அதாவது பிறப்பு

உண்டாயினும் = உண்டானாலும்

ஏழேழு பிறப்பும் = ஏழேழ் பிறப்பும்

இல்லையென்று இரப்போர்க்கு = இல்லை என்று யாசகம் கேட்டு வருவோர்க்கு

இல்லை என்று உரையா = நானும், என்னிடம் இல்லை உனக்குத் தருவதற்கு என்று சொல்லாத

இதயம் நீ அளித்து அருள் என்றான் = இதயத்தை நீ தந்து அருள்வாய் என்றான்


கர்ணனுக்குப் பிறகு கொடை வள்ளல் யாரும் இல்லை. அதனால் தான்   இன்றும் கூட  யாரவது தானம் செய்தால் "கலியுக கர்ணன்" என்று சொல்லுவார்கள்.  கர்ணன் தான் ஈகைக்கு உச்சம். 

பிறருக்கு உதவி செய்வது என்பது இப்போதெல்லாம் ரொம்ப குறைந்து விட்டது. சுயநலம் மிகுந்து போனது. 


ஈகை, கொடை , தானம்,  தர்மம் என்ற சொற்கள் கூட நாளடைவில் வழக்கொழிந்து போய் விடும் போல் இருக்கிறது.

 வறண்டு கிடக்கும் இதயங்களில் மழை  வார்க்கும் இது போன்ற  இலக்கியங்களை   அவ்வபோது வாசிப்போம். 

நம் பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவோம். 

யாருக்குத் தெரியும் , எந்த விதை எங்கே முளைக்கும் என்று ....


 

3 comments:

  1. நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படி ஒரு வரம் கேட்க மிக உயர்ந்த உள்ளம் வேண்டும். பகிர்விற்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. மகாபாரதத்தின் மிக உருக்கமான பாத்திரம் கர்ணன்தான். இந்தப் பாடலையும், உன் விளக்கத்தையும் படித்து, கண்கள் பனித்துவிட்டன. இந்த மாதிரிப் பொக்கிஷத்தைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மகாபாரதம்.....பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் என்னும் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக இடையறாது ...ஓடிக்கொண்டே இருக்கிறது.இதன் கவி வரிகளை நான் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்

    ReplyDelete