தேவாரம் - மீண்டும் பிறந்தால் மறப்பேனோ ?
துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே.
உயிருக்கு இந்த உடல் மேல் தீராத காதல். விடவே விடாது. இருப்பினும் ஒரு நாள் நான் இந்த உடலை விட்டு விட்டு கால தூதரோடு வானுலகம் போவேன். போன பின், என் வினைப் பயனால் மீண்டும் வந்து பிறப்பேன். இறப்பதற்கோ, வானுலகம் போவதற்கோ, மீண்டும் வந்து பிறப்பதற்கோ எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஆனால், அப்படி மீண்டும் வந்து போறது , இறைவா உன்னை மறந்து விடுவேனோ என்று என் மனம் கிடந்து மறுகுகிறது .
சீர் பிரித்த பின்
துறக்கப் படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு
இறப்பன் , இறந்தால் இரு விசும்பு ஏறுவன் , ஏறி வந்து
பிறப்பன் , பிறந்தால் பிறை அணிவார் சடை பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே
பொருள்
துறக்கப் படாத உடலை = துறப்பதற்கு கடினமான இந்த உடலை
துறந்து = துறந்து
வெம் தூதுவரோடு = வெம்மையான (காலனின் ) தூதுவர்களோடு
இறப்பன் = இறப்பேன்
இறந்தால் = இறந்தபின்
இரு விசும்பு ஏறுவன் = வானுகலம் போவேன்
ஏறி வந்து = அங்கு போன பின்
பிறப்பன் = மீண்டும் பிறப்பேன்
பிறந்தால் = அப்படி பிறந்தால்
பிறை அணிவார் = பிறைச் சந்திரனை அணியும்.
நிலவு உலாவிய நீர் மலி வேனியன் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்
சடை = சடை முடி கொண்ட
பிஞ்ஞகன் = அழிப்பவன்.எதை அழிப்பவன் ? நம் பாவங்களை, நம் இருவினை பயன்களை, நம் பிறவித் தொடரை அழிப்பவனை.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க என்பார் மணிவாசகர்
பேர் மறப்பன் கொலோ = ஒரு வேளை மறந்து போவேனோ
என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே = என்று என் உள்ளம் கிடந்து மயங்குகின்றது
திருநாவுக்கரசருக்கே இந்த கதி என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்
எக்காலத்திலும் அவனை மறவாதிருக்க அவனே அருள வேண்டும்.
ReplyDeleteword verification-க்கு பதில் comments-ஐ நீங்களே moderate பண்ணலாமே... this delays / discourages readers from commenting. just my 2 cents.
ReplyDelete