திருக்குறள் - இரகசியமான ஆசைகள்
யாரிடம்தான் இரகசியமான ஆசைகள் இல்லை ? வெளியே சொல்ல முடியாத ஆசைகள் எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பம், நண்பர்கள், சமுதாயம், சட்டம் இவை எல்லாம் ஒத்துக் கொள்ளாது என்று பூட்டி வைத்த ஆசைகள் மனதில் ஏதோ ஓரத்தில் உறங்கித்தான் கிடக்கிறது.
இது தவிர்க்க முடியாதது.
அவை எல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது. சொன்னால் யார் கேட்பார்கள். அது தவறு என்று எல்லோர்க்கும் தெரியும்....ஆனால் இந்த மனம் எங்கே கேட்கிறது ?
இதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்.
மிக மிக ஆச்சரியமான ஒரு கருத்தை சொல்கிறார்.
அந்த மாதிரி ஆசைகளை மற்றவர்கள் அறியாமல் அனுபவிக்கச் சொல்கிறார். இவைகள் ஒருவனுக்கு பலவீனம். பலவீனம் இல்லாத மனிதன் கிடையாது. ஆனால் அந்த பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
நம்ப முடியாத அந்த குறள் ....
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
பொருள்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் = தான் விரும்பியவற்றை, தான் அவற்றை விரும்பி அனுபவிக்கிறேன் என்று மற்றவர் அறியாமல் அனுபவித்தால்
ஏதில ஏதிலார் நூல் = ஏதிலார் என்றால் பகைவர்கள் அல்லது நம்மோடு ஒத்து போகாதவர்கள். அவர்கள் நம்மை வஞ்சிக்க மாட்டார்கள். அதாவது நம் பலவீனத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாகக் கொள்ள முடியாது.
இதில் இன்னும் நுணுக்கமான அர்த்தம் உள்ளது.
காமம், வெகுளி, உவகை இவை எல்லாம் முற்றுமே விலக்க வேண்டிய குற்றங்கள் அல்ல என்கிறார் பரிமேலழகர்.
இதில் காமம் என்பதைத்தான் இந்த குறளில் குறிப்பிடுகிறார்.
காதல காதல் அறியாமை என்பது காமத்தை மட்டும் குறிப்பிடுவதாக பரிமேல் அழகர் குறிப்பிடுகிறார்.
இரகசியமான காதல் மற்றும் காமத்தை யாரிடமும் சொல்லக் கூடாது.
அதாவது, அதை முற்றாக விலக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லவில்லை.
உய்தல் என்றால் மீண்டு வருந்தல், கடைந்தேறுதல் .
உய்வார்கள் உய்யும் வழியெல்லாம் உய்ந்து ஒழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவை என்பார் மணிவாசகர்
காமத்தை மற்றவர்கள் அறியாமல் அனுபவித்து மீண்டு வா என்பது பொருள்.
இது அரசனுக்குச் சொன்னது என்று சொல்லி முடிக்கிறேன்....:)
நூல் என்றால் என்ன?
ReplyDeleteஆச்சரியமான பாடல்.