இராமாயணம் - சடாயு இறுதிக் கடன்
இலக்கியத்தை அதன் கதைக்காக படிக்கிறோம்.அதில் உள்ள கவிதை சுவைக்காக படிக்கிறோம். சொல் விளையாட்டுகள் பிடித்து இருக்கிறது.
ஆனால், அவை சொல்லும் செய்திகளை விட்டு விடுகிறோம்.
மிகப் பெரிய இழப்பில் இருக்கிறான் இராமன். சக்ரவர்த்தி பதவி போயிற்று. நாட்டை விட்டு விரட்டி விட்டார்கள். மனைவியை எவனோ தூக்கிக் கொண்டு போய் விட்டான். தந்தையின் நண்பன் அவனுக்காக அடிபட்டு சாகக் கிடக்கிறான்.
நாமாக இருந்தால் எப்படி இருப்போம் ? கோபம், எரிச்சல்,ஏமாற்றம், வெறுப்பு எல்லாம் வரும்.
அவ்வளவு சிக்கலிலும் இராமன் வாழ்ந்து காட்டுகிறான்.
குகனை, சுக்ரீவனை, விபிஷணனை சகோதரனாக கொள்கிறான். ஏன் ?
சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான் . ஏன் ?
தீண்டாமை, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
மனிதன் கூட அல்ல. ஒரு பறவையை தொட்டு தூக்கி, அந்தப் பறவையை தந்தை என நினைத்து அதற்க்கு இறுதி கடன் செய்கிறான். அந்த பறவையை அப்படியே விட்டு விட்டு சென்றிருந்தால் யாரும் இராமன் மேல் தவறு காண முடியாது.
இருந்தாலும், சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான்.
இராமன் சொல்லும் செய்தி - தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது. தீண்டத்தகாதவன் என்று யாரும் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்பு.
இதை படித்த பின்னும் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டினால், படித்ததன் பலன் தான் என்ன ?
பாடல்
ஏந்தினன் இரு கைதன்னால்;
ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்;
தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்
முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர
நெறியின் வல்லான்.
பொருள்
ஏந்தினன் இரு கைதன்னால் = சடாயுவை தன் இரண்டு கைகளால் ஏந்தினான்
ஏற்றினன் ஈமம்தன்மேல் = ஈமக் கடன் செய்ய வேண்டிய மேடை மேல் தூக்கி வைத்தான்
சாந்தொடு = சந்தனத்தொடு
மலரும் = பூக்களும்
நீரும் சொரிந்தனன் = நீரை தெளித்தான்
தலையின் சாரல் = தலைப் பக்கத்தில் (சாரல் = பக்கம்)
காந்து எரி கஞல மூட்டி,= எரிகின்ற நெருப்பை மூட்டினான்
கடன் முறை கடவாவண்ணம் = எந்த கடமையும் தவறாமல்
நேர்ந்தனன் = செய்தான்
நிரம்பும் நல் நூல் = அர்த்தம் நிரம்பிய நல்ல நூல்களின்
மந்திர நெறியின் வல்லான் = மந்திர நெறிகளில் வல்லவனான இராமன்.
அன்பு எல்லா வேற்றுமைகளையும் மறைக்கும். அன்பு இல்லாத இடத்தில் வேற்றுமை தோன்றும்.
இராமன் சொல்ல வில்லை. செய்து காட்டினான்.
இராமாயணம் தோன்றிய பின் பல காலம் வரை தீண்டாமை இருந்தது - கோவில்களில்.
இராமனை தெய்வமாக வழிபடுவோர் மனத்திலும் தீண்டாமை இருந்தது. உயர்வு தாழ்வு வேறுபாடு இருந்தது.
கற்ற பின் நிற்க அதற்கு தக !
அது மட்டுமல்ல. கஷ்ட காலத்திலும் கடமையைத் தவறாமல் செய்தான்.
ReplyDelete