இராமாயணம் - இராமன் கானகம் போனதும் நல்லது தான்
இராமன், குகனை கண்டபின், கங்கை கரை கடந்து வனம் புகுந்தான். அவனை தேடிக் கொண்டு வந்தான் பரதன். முதலில் பரதனைக் கண்டு, அவன் இராமனை கொல்லத்தான் வந்திருக்கிறான் என்று தவறாக நினைத்தான் குகன்.பின் தெளிவு பெற்று "ஆயிரம் இராமர் நின் கேள்வர் ஆவரோ தெரியின் அம்மா " என்று கூறுகிறான்.
எல்லோரும் படகில் ஏறுகிறார்கள். கோசலையை கண்டு பரதனிடம் குகன் கேட்டான், "இந்தத் தாய் யார்" என்று.
பரதன் சொன்னான் "இந்த உலகை ஈன்றவனை , ஈன்றவள்.நான் பிறந்ததால் அவனை இழந்தவள்" என்றான்.
கேட்டவுடன் குகன் அவள் காலில் விழுந்து கதறி அழுதான்.
இங்கே ஒரு நிமிடம் நிறுத்துவோம்.
ஏன் குகன் அழுதான் ?
ஒரே ஒரு நாள் இராமனைப் பார்த்த பின் குகனால் இராமனைப் பிரிந்து இருக்க முடியவில்லை.
"உன்னை இங்ஙனம் பார்த்த கண்களை ஈர்க்கலா கள்வன் யான்" என்று கூறியவன். இராமனைப் பார்த்த கண்களை எடுக்க முடியவில்லையாம்.அப்படி ஒரு நாள் பார்த்த என்னாலேயே அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லையே, பத்து மாதம் அவனை சுமந்து பெற்று வளர்த்த நீ எப்படித்தான் அவனை பிரிந்து இருக்கிறாயோ என்று நினைத்து அழுதான்.
அவன் அழுவதைப் பார்த்து கோசலைக்கு ஆச்சரியம்.
அவனை யார் என்று பரதனிடம் கேட்டாள்.
பரதன் கூறினான் "இராமனுக்கு இனிய துணைவன். எங்கள் எல்லோருக்கும் மூத்தவன் " என்று.
கோசலை கூறுகிறாள்...
"இராமன் நாடு விட்டு காடு வந்ததும் நல்லதாகப் போயிற்று. அவன் கானகம் வரமால் இருந்திருந்தால், இப்படி பட்ட ஒரு நல்லவனை தம்பி கிடைத்திருப்பானா ? இனி நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக இந்த அவனியை ஆளுங்கள் " என்றாள் .
கோசலை - சக்ரவர்த்தியின் பட்டத்து மகாராணி. இராமனைப் பெற்றவள். அவளின் பெருமை எவ்வளவு இருக்கும் ? குகனை யார் என்று கேட்டு இருக்கிறாள். குகனை இதற்க்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது. நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக நாட்டை ஆளுங்கள் என்கிறாள்.
இராமனின் அன்பு எங்கிருந்து வந்தது என்று இப்போது தெரிகிறதா ? அவனின் தாய் கோசலையிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.
அவள் எவ்வளவு எளிமையானவளாய் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு அன்பும்,பாசமும் உள்ளவளாய் இருந்திருக்க வேண்டும் ? அவளிடம் எவ்வளவு தாய்மை உணர்வு நிறைந்திருக்க வேண்டும் ?
பாடல்
நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்' என்றாள்
பொருள்
நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால் = இனி துன்பத்தால் நைந்து போகாதீர்கள் பிள்ளைகளே
நாடு இறந்து = நாட்டை விட்டு
காடு நோக்கி = காட்டை நோக்கி
மெய் வீரர் = உண்மையான வீரர்களான இராமனும் இலக்குவனும்
பெயர்ந்ததுவும் = வந்ததும்
நலம் ஆயிற்று ஆம் அன்றே! = நல்லாதகப் போயிற்ரு
விலங்கல் திண்தோள் = மலை போன்ற திண்ணிய தோள்களை கொண்ட
கை வீரக் களிறு அனைய காளை = யானை போல திடமான உருவமும்,பலமும் கொண்ட காளையான இவன்
இவன் தன்னோடும் கலந்து = இவனோடு ஒன்றாக
நீவிர் ஐவீரும் ஒருவீர் ஆய் = நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக
அகல் இடத்தை = அகன்ற இந்த பூமியை
நெடுங் காலம் அளித்திர்' என்றாள் = நெடுங்காலம் ஆட்சி செய்யுங்கள் என்றாள்
கண் பனிக்கும் பாடல்.
ஒவ்வொரு பாத்திரமும் தத்தமது சொற்றொடர்களால் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். என்னவொரு உயர்ந்த மனோபக்குவம், அதுவும் பிரிவு எனும் சோகமான ஒரு சூழ்நிலையில்.
ReplyDeleteசாதாரண மனிதர்களின் கண்ணோட்டத்தில், அங்கிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எதிரிகள் மற்றும் அவர்களின் துன்பத்திற்கும் காரணமாயிருப்பவர் அங்கிருக்கும் மற்றொருவர். ஆனால் அவர்கள் மற்றொருவரை உயர்வாகப் பேசுவது மட்டுமின்றி அதற்காக தம்மையும் தாழ்த்திப் பேசுகின்றனர். ஆஹா