Pages

Monday, October 28, 2013

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்






பிறவிதனை அறமாற்றிப் = பிறவி தனை அறவே மாற்றி. அதாவது இனிமேல் பிறவி என்பதே இல்லாமல் செய்து. 

 பிணிமூப்பென் றிவையிரண்டும் = பிணி மூப்பு என இவை இரண்டும்

உறவினொடும் ஒழியச் = இங்கு உறவு என்பது பற்று என்ற பொருளில் காண வேண்டும். எல்லாப் பற்றியும் நீக்கி

சென் று = சென்று

உலகுடைய  ஒருமுதலைச் = உலகத்தை உருவாக்கிய ஆதியை. முதல்வன். எல்லாவற்றிற்கும் முதல்வன். "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணி வாசகர். 

செறி = அடர்ந்த

பொழில் = சோலைகள்

சூழ் = சூழ்ந்த

தில்லை நகர்த் = தில்லை நகரில் (சிதம்பரம்)

திருச்சிற்றம் பலம் = திருச்சிற்றம்பலத்தில். சிற்றம்பலம் என்றால் சின்ன அம்பலம். பெரிய அம்பலம் என்று ஒன்றும் இருக்கிறது. அது பற்றி பின்னால் பார்ப்போம்.

மன்னி = அடைந்து அல்லது இருக்கும்

மறையவரும் = வேதம் ஓதுபவர்களும்

வானவரும்  = வானவர்களும்

வணங்கிட நான் கண்டேனே = வணங்குவதை நான் கண்டேன்


No comments:

Post a Comment