Pages

Sunday, October 27, 2013

குறுந்தொகை - காமர் மாந்தி

குறுந்தொகை - காமர் மாந்தி 


இது நடந்ததா, நடக்குமா இல்லை வெறும் கற்பனையா என்று தெரியாது. இருந்தாலும் மனதைத் தொடும் பாடல்.

தோழி சொல்கிறாள் தலைவனிடம்

கரிய தலையை கொண்ட ஆண்  குரங்கு இறந்த  பின்,அதன் ஜோடி பெண் குரங்கு அதன் குட்டிகளை தன் உறவினர்களிடம் கொடுத்து விட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொள்ளும் மலைகளை கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே, இனிமேல் இரவு நேரத்தில் தலைவியை காண வராதே...இரவில், மலை பாங்கான வழியில் உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எங்களுக்கு வருத்தமாய் இருக்கிறது.....

பாடல்

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

பொருள்

கருங்கண் = கரிய கண்கள் 

தா(க்) = தாவும்

கலை =  ஆண் குரங்கு

பெரும் பிறிது = பெரிய பிரிவு , அதாவது மரணம்

உற்றனக் = அடைந்ததை

கைம்மை = விதவையான

உய்யாக் = வாழும் வழி தெரியாத, வாழ விருப்பம் இல்லாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = வயதாகத

வன் பறழ் = சுட்டித் தனம் நிறைந்த குட்டியை

கிளை முதல் சேர்த்தி = உறவினர்களிடம் சேர்த்துவிட்டு

ஓங்கு = உயர்ந்த

வரை = மலை

அடுக்கத்துப் பாய்ந்து = பள்ளத்தில் பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = அந்த மாதிரி உள்ள நாட்டைச் சேர்ந்தவனே

நடுநாள் = நடு இரவில்

வாரல் = நீ வராதே 

வாழியோ = நீ வாழ்க 

வருந்துதும் யாமே. = நாங்கள் வருந்துவோம்

குரங்குக்கு அவ்வளவு காதல், அவ்வளவு பொறுப்பு....அப்படி என்றால் அந்த ஊர் மக்களைப் பற்றி  என்ன சொல்லுவது....




1 comment:

  1. கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?!?!

    ReplyDelete