இராமாயணம் - மழைச் சாரல் வாழ்கை
‘விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.
தசரதன் இறந்த செய்தி கேட்டு அயர்ந்து நின்ற இராமனை தேற்றிக் கூறுகிறான் வசிட்டன்.
வானிலிருந்து விழும் மழைத் துளிகள் எத்தனை இருக்கும். இதுவரை விழுந்த துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்.
ஒரு மழைத் துளி வரும்போதே தெரியும் அது தரையில் மோதி சிதறி தெறிக்கப் போகிறது என்று.
கீழிறங்கி வரும் போது அழகாக இருக்கும் ...அது வானவில்லை உண்டாக்கும்....ஆனால் வரும்போதே தெரியும் அதன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.
மழை நீர் கீழே விழுந்து சிதறி விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ?
அப்படி வருந்தினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரியதாய் இருக்கும்.
இராமா !, நீ இதற்காக (தசரதன் ) இறந்ததற்காக அழுவது உன் பெருமைக்கு இழுக்கு . அழுவதை விட்டு விட்டு அவனுக்கு உரிய நீர் கடனை செய்.
பொருள்
விண்ணு நீர் = விண்ணில் இருந்து வரும் நீர் துளிகள்
மொக்குகளின் = அரும்புகள் போல இருக்கும்
விளியும் யாக்கையை = அழியும் உடலை
எண்ணி = நினைத்து
நீ = நீ
அழுங்குதல்= வருந்துதல்
இழுதைப்பாலதால் = இழுக்கு ஆகும்
கண்ணின் நீர் = கண்ணீர்
உகுத்தலின் = விடுவதால்
கண்டது இல்லை = கண்ட பயன் ஒன்றும் இல்லை.
போய் = நீ போய்
மண்ணு நீர் உகுத்தி = நீர்க் கடனை செய்
நீ மலர்க்கையால் = உன்னுடைய மலர் போன்ற கையால்
என்றான் = என்றான் வசிட்டன்
சாமாறே விரைகின்றேன் என்பார் மணி வாசகர். இறப்பதற்காக விரைவாக போய் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment