Pages

Friday, November 22, 2013

வில்லி பாரதம் - நாடு இரந்தோம்

வில்லி பாரதம் - நாடு இரந்தோம் 


வல் என்றால் சூதாட்டம்.

வல்லினால் இழந்த நாட்டை வில்லினால் பெறுவதை விட ஒரு சொல்லினால் பெறுவது நல்லது என்று எண்ணி, கண்ணன் , பாண்டவர்கள் சார்பாக தூது போக தயாராகிறான்.

போகும் முன் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

கண்ணன்: நகுலா நீ என்ன சொல்கிறாய் ?

நகுலன்: கண்ணா, நாங்கள் எவ்வளவோ அவமானப் பட்டு விட்டோம். பட்டதெல்லாம் போதும். இப்ப நீ போய் நாடு கேட்டு அவன் தராவிட்டால் "நாடு பிச்சை கேட்டவர்கள் " என்ற அவப் பெயரும் வந்து சேரும்.

கண்ணன்: அதனால் ?

நகுலன்: நாடு பிச்சை கேட்பதை விட , சண்டை போட்டு நாட்டை வெல்லலாம்.

பாடல்

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக்
                               கிரியொன்றேந்து, 
கோவலன் போயுரைத்தாலுங் குருநாடுமரசுமவன்
                             கொடுக்கமாட்டான், 
நாவலம்பூதலத்தரசர் நாடிரந்தோமென நம்மை நகையாவண்ணங், 
காவலன்றன் படைவலியுமெனது தடம்புயவலியுங் காணலாமே.


சீர் பிரித்த பின்


கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றை ஏந்திய 
கோவலன் போய் உரைத்தாலும் குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் 
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையா வண்ணம் 
காவலன் தன் படை வலியும் எனது தடம் புய வலியும் காணலாமே 

பொருள்

கேவலம் தீர் = சிறுமை தீர. பெரிய என்று பொருள்

வலிய பகை கிடக்க = வலிமையான பகை கிடக்க

முதல் கிளர் மழைக்கு = முன்பு ஆயர்பாடியில் கிளர்ந்து எழுந்த மழைக்கு

கிரி ஒன்றை ஏந்திய  = கோவர்த்தன கிரியை குடை போல ஏந்திய

கோவலன் போய் உரைத்தாலும் = கோவலனான கண்ணன் போய் சொன்னாலும்

குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் = நாட்டையும், அதை ஆளும் அரச உரிமையும் அவன் (துரியோதனன்) கொடுக்க மாட்டான்


நாவலம் பூதலத்து = இந்த பூமியில் உள்ள

அரசர் = அரசர்கள் எல்லோரும்

நாடு இரந்தோம் = நாட்டை பிச்சையாக கேட்டோம்

என நம்மை நகையா வண்ணம்  = என்று நம்மை பார்த்து சிரிக்காமல் இருக்க

காவலன் தன் படை வலியும் = நாட்டுக் காவலன் ஆன துரியோதனின் படை வலியும்

எனது தடம் புய வலியும் காணலாமே  = என் தோள்களின் வலிமையையும் கானாலாமே



1 comment:

  1. இவரது சொல் நடை மற்ற பல கவிஞரை விட மிக மாறுபட்டதாக இருக்கிறது. பதம் பிரிக்காமல், உரை இல்லாமல் புரிந்துகொள்ள இயலாது.

    பாடலுக்கு நன்றி.

    ReplyDelete