வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான்
பாண்டவர்களுக்காக , கண்ணன் துரியோதனிடம் தூது போகிறான். அஸ்தினாபபுரம் வந்து விட்டான்.
எங்கு தங்குவது ?
துரியோதனன் மாளிகை இருக்கிறது, பீஷ்மர், துரோணர், சகுனி, துச்சாதனன் இவர்கள் மாளிகை எல்லாம் இருக்கிறது.
கண்ணன் எங்கு தங்குவான் ?
செல்வமும், படை பலமும், புகழும், நிறைந்த துரியோதனன் அரண்மனையிலா ?
வயதில் மூத்தவர், பிரமச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர் அரண்மனையிலா ?
கல்வி கேள்விகளிலும் , வில் வாள் வித்தையிலும் சிறந்த துரோணர் அரண்மனையிலா ?
இல்லை.
இங்கு எங்கும் தங்கவில்லை.
இவை எதுவும் இல்லாத நீதிமான், அற வழியில் நிற்கும் விதுரன் அரண்மனையில் தங்கினான்.
விதுரனே சொல்கிறான்....
"கண்ணா, நீ பாற்கடலில் தங்குவாய், ஆதிசேஷனை பாயாகக் கொண்டு தூங்குவாய், ஆல் இலையில் துயில்வாய், வேதங்களில் நீ இருப்பாய், நீ இங்கு வருவதற்கு என் குடிசை என்ன மாதவம் செய்ததோ "
பாடல்
'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.
பொருள்
'முன்னமே = முன்பே
துயின்றருளிய = துயின்று அருளிய
முது பயோததியோ! = பழமையான பாற்கடலோ
பன்னகாதிபப் பாயலோ! = பன்னக அதிபன் பாயாலோ. பாம்புகளுக்கு அரசனான ஆதி சேஷன் என்ற பாயோ ?
பச்சை ஆல் இலையோ! = பச்சை ஆல் இலையோ ?
சொன்ன நால் வகைச் சுருதியோ! = நான்கு வேதங்களோ
கருதி நீ எய்தற்கு = நீ வந்து இருப்பதற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான் = என்ன மாதவம் செய்தது என் இந்த சிறு குடில்
இறைவனை தேடி நீங்கள் போக வேண்டாம். அவன் உங்களை தேடி வருவான்.
எப்போது என்று இந்த பாடல் சொல்கிறது.
மறந்து விட்டேன் - மகாபாரதப் போரில், விதுரர் என்ன செய்தார்? யார் பக்கம் சண்டையிட்டார்?
ReplyDelete