இராமாயணம் - புலன் அடக்கத்தை விட அன்பு சிறந்தது
அன்று தொட்டு இன்று வரை ஆசையே துன்பத்திற்கு காரணம், புலன் அடக்கம் அவசியம் என்று எல்லா நூல்களும் போதித்து வருகின்றன.
இராமயணம் இந்த அடிப்படை உண்மையை கேள்வி கேட்கிறது.
புலன்களை நம் எதிரிகள் என்று நினைத்து அவற்றோடு சண்டை போட்டு, அவற்றை அடக்கி, அவற்றை தூய்மை படுத்துகிறேன் என்று அவற்றை போட்டு கொல்வது ஏன் ? அன்றும், இன்றும் , என்றும் மூன்று உலகத்திலும் அன்பே சிறந்தது. புலன் அடக்கத்தை விட அன்பு செலுத்துவதே சிறந்தது என்று இராமனுக்கு வசிட்டர் கூறுகிறார்.
பாடல்
‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?
பொருள்
என்பு = எலும்பு
தோல் = தோல்
உடையார்க்கும் = உடையவர்கள் - முனிவர்கள், தவைச்கள். அவர்கள் உடம்பில் எலும்பும் தோலும் தான் இருக்கும்
இலார்க்கும் = அது இல்லாதவர்களுக்கும் - அதாவது சாதாரண மனிதர்களுக்கும், தேவர்களுக்கும்
தம் = தங்களுடைய
வன் பகைப் = வன்மையான பகை
புலன் = புலன்களை
மாசு அற மாய்ப்பது என்? = குற்றம் இல்லாமல் செய்கிறேன் என்று அவற்றை கொல்வது ஏன் ?
முன்பு பின்பு இன்றி = இறந்தகாலம் மற்றும் எதிர் காலம் மட்டும் இல்லாமல். அப்படி என்றால் நிகழ் காலத்திலும் என்று அர்த்தம்.
மூ உலகத்தினும் = மூன்று உலகிலும்
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ? = அன்பை விட சிறந்த ஆக்கம் உண்டோ?
அன்பிருக்கும் இடத்தில் தவறு நிகழாது. புலன் அடக்கம் இல்லாவிட்டாலும் அன்பு இருந்தால் அது சிறந்த நன்மையை தரும்
ஆச்சரியமான பாடல்.
ReplyDeleteஅன்பு இருந்தால் புலன் அடக்கம் ஏன் என்று கேட்கும் கம்பரே, நீ இன்னொரு ப்ளோகில் எழுதியபடி, காமமே எல்லாக் குற்றங்களையும்விட மோசமானது என்று சொல்லியிருப்பது சேர்த்து எண்ணத்தக்கது.