நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம்
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.
வெளியில் விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வருமா ? உள்ளே வரும் என்று என்ன உத்தரவாதம்.
போன நொடி துடித்த இதயம் அடுத்த நொடி அடிக்குமா ? அடிக்க வேண்டும் என்ற என்ன கட்டாயம் ?
யாரைக் கேட்டு இது எல்லாம் நடக்கிறது ? நாம் சொல்லித்தான் நடக்கிறது என்றால் கடைசியில் விட்ட மூச்சை ஏன் மீண்டும் இழுக்க முடியவில்லை ?
ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம்.
இந்த உடலை விட்டு உயிர் போவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை.
ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?
பாடல்
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
பொருள்
வருந்தும் உயிர் = வருத்தப் படும் உயிர்
ஒன்பான் வாயில் உடம்பில் = ஒன்பது வழிகளை கொண்ட உடலில்
பொருந்துதல் தானே புதுமை = பொருந்தி இருப்பதுதானே புதுமை
தீருந்திழாய் = அழகான பெண்ணே
சீத நீர் = குளிர்ந்த நீர்
பொள்ளல் = ஓட்டை உள்ள
சிறுகுடத்து = சின்ன குடத்தில்
நில்லாது = நிற்காமல்
வீதலோ = ஒழுகிப் போவதோ
நிற்றல் = ஒழுகாமல் நிற்பதோ
வியப்பு = ஆச்சரியம் ?
வாழ்க்கை நிலையாமைக்கு நல்ல பாடல். என்ன அழகாகச் சொல்லியிருக்கிறார்!
ReplyDelete