Pages

Monday, February 3, 2014

திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?

திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?


நம் இலக்கியங்கள் எப்போதும் பெண்ணாசை பற்றியே பேசுகிறது. ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள காதல், காமம், ஆசை பற்றியே பேசுகிறது.

பெண்ணுக்கு காமம் , காதல் , ஆசை இவை எல்லாம் இருக்காதா ? பின் ஏன் அது பெரிதாகப் பேசப் படவில்லை ?

பெண்ணுக்கும் இவை எல்லாம் உண்டு. அவர்களும் ஜொள்ளு விடுவார்கள் - மனதுக்குள். வெளியே தெரியாது.

அவர்களுக்குள்ளும் காமம் கடல் போல் கொந்தளிக்கும். அலை வந்து கரை  அரிக்கும்.காமம் நீர் சுழல் போல் மனதை உள் இழுக்கும். கரை காணாமல் தட்டுத் தடுமாற வைக்கும்.

இருந்தாலும் அதை எப்படித்தான் வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே அமுக்கரையாக வைத்துக் கொள்கிறார்களோ தெரியாது.

எவ்வளவு கஷ்டம் மனதில் தோன்றும் காதலை வெளியே சொல்லாமல் இருப்பது.

ஆண்களைப் போல பெண்களால் அன்பை அவ்வளவு எளிதாக சொல்ல  முடிவதில்லை.இதை  ஆண்கள் புரிந்து கொள்வதும் இல்லை. "சொன்னாத் தானே தெரியும் "  என்று அடம்  பிடிக்கிறார்கள்.

பெண்களால் சொல்ல முடிவதில்லை.

அப்படி சொல்லாமல் இருப்பது தான் அவர்களின் பெருமை. அவர்களின் சிறப்பு.

அப்படி ஆசையையும் காமத்தையும் மனதில் அடக்கி வைத்திருக்கும் பெண்ணின் அந்த  குணத்தைப் போல மிகச் சிறந்த குணம் வேறு ஒன்றும் கிடையாது என்கிறார்  வள்ளுவர்.


பாடல்

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். 

பொருள்

கடலன்ன = கடல் போல. கடல் போல என்றால் கடலின் ஆழம், கடலின் மிகப் பெரிய அளவு, கடலின் வற்றாத தன்மை, கடலின் மர்மங்கள், கடலின் சலனம், கடலின் அமைதி, கரை காண முடியாத தூரங்கள்...இப்படி பலப் பல 


காம = காமம்.

உழந்தும் = அடைந்தும் 

மடலேறாப் = மடலேறுதல் என்றால் அந்தக் காலத்தில் ஆண்கள் ஓலையால் செய்த குதிரை மேல் ஏறி காதலியின் வீட்டின் முன்னால் தர்ணா செய்வது...அவளை எனக்கு  கட்டிக் கொடு என்று.


பெண்ணிற் = பெண்ணைப் போல

பெருந்தக்கது இல் = பெரிய (குணம்) இல்லை.

அடக்கம் பெண்ணின் இயல்பு. அவளுக்குள்ளும் காதலும் காமமும் உண்டு. அதை  வெளியே சொல்லாதது அவளின் இயல்பு. அதுவே அவளின் சிறப்பும் கூட.

இங்கே ஒரு காதலன் நினைக்கிறான்....இந்த காதல் என்னை என்ன பாடு படுத்துகிறது. அவளையும் அப்படி படுத்தும் தானே. ஆனால் வெளியே ஒன்றும் சொல்லாமல்  எப்படித்தான் இருக்கிறாளோ என்று வியக்கிறான்....

அவன் மட்டுமா ?



1 comment:

  1. அருமையான திருக்குறள். நல்ல விளக்க உரை. நன்றி.

    ஆண்கள் வெளியே சொன்னாலும் கூட, அவர்களின் காம உணர்வுகள் பற்றிய இலக்கியங்கள் பற்பல. ஆனால், பெண்கள் வெளியே சொல்லாவிட்டாலும், அவர்களின் காமத்தைப் பற்றிய இலக்கியங்கள் சிலவே. தற்காலத்துப் புலவர்களில், ஒரு பெண் புலவர் (பெயர் மறந்து விட்டேன்) பெண்களின் காம உணர்வைப் பற்றி எழுதியதற்கு, சில வருடங்களுக்கு முன் பல எதிர்ப்புகள் வந்தன என்று கேள்விப்பட்டேன். பழைய கால இலக்கியத்திலும் அப்படித்தானா?

    ReplyDelete