Pages

Tuesday, March 25, 2014

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும்

சுந்தர காண்டம் - பெண்ணின் அருகாமை துன்பம் துடைக்கும் 


அனுமன் மிகுந்த ஆற்றலோடு மகேந்திர மலையை உந்திக் கிளம்புகிறான்.

அப்போது என்னென்ன  நிகழ்ந்தது என்று கம்பர் பட்டியல்  இடுகிறார்.

பூமி மட்டும் அல்ல, வானமும் சும்மா அதிர்ந்துதுல்ல...

வானுலகப் பெண்கள் எல்லாம் பயந்து அருகில் உள்ள தேவர்களை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அந்த தேவர்கள் அழகு மேலும் கூடி பொலிந்தனர்.

இருக்காத பின்ன...?

தேவலோகப் பெண்கள் கட்டிப் பிடித்தால் மகிழ்ச்சியில் முகம் பிரகாசிக்காதா என்ன ?

அப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தேவனை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எப்படி இருந்தது என்றால் ...

முன்பொரு நாள் , இராவணன் கைலாய மலையை தூக்க முயன்ற போது உமா தேவியார் சிவனைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்த மாதிரி இருந்தது.

பாடல்

வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில் இயல் தளிர்க் கை மாதர் தழீஇக் கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித் தனி கடுத்தல் செய்தார்






பொருள் 

வெயில் இயல் குன்றம் = ஒளி பொருந்திய மகேந்தர மலை 

கீண்டு வெடித்தலும் = இரண்டாக வெடித்ததும்

நடுக்கம் எய்தி = நடுக்கம் கொண்டு

மயில் இயல் = மயில் போன்ற சாயலும்

தளிர்க் கை = தளிர் போன்ற கைகளும் கொண்ட

மாதர் = பெண்கள்

தழீஇக் கொளப் = தழுவிக் கொள்ள

பொலிந்த = மேலும் அழகுற்று பொலிவுடன் தோன்றிய

வானோர் = வானோர்


அயில் = கூர்மையான

எயிற்று = பற்களைக் கொண்ட

அரக்கன் = இராவணன்

அள்ளத் =  கையில் அள்ளுவதற்கு (தூக்கக் கூட இல்லை, அள்ளுவதற்கு முயன்றானாம்)

திரிந்த நாள் = முயன்ற அந்நாள்

அணங்கு  = பெண் (பார்வதி )

புல்லக் = அணைத்துக்  கொள்ள

கயிலையில் = கைலாய மலையில்

இருந்த தேவைத் = இருந்த தேவர் (சிவன் )

தனித் தனி கடுத்தல் செய்தார் = எப்படி சிவனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு நின்றார்களோ அது போல ஒவ்வொரு தேவரும் நின்றார்.


தேவர்கள், இராவணின் கொடுமையால் துன்பப் பட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த துன்பத்திலும், தேவ மாதர்கள் கட்டி அணைத்த போது அந்த துன்பத்தை மறந்து  பொலிந்தனர் .

நமக்கும்  துன்பம் வரும்.

பொலிய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கம்பன் பாடம் நடத்துகிறான்.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் , பெண்ணின் அருகாமை ஆணின் துன்பத்தைப் போக்கி அவனை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்கிறார்கள்.

காரணம் இல்லாமல் ..இருக்காது...

துன்பம் வந்தால் கணவனும் மனைவியும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு, சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.

என்ன செய்யவேண்டும் என்று பாடல் சொல்கிறது... அப்புறம் உங்க இஷ்டம் ...


1 comment:

  1. அப்படி கட்டிப் பிடிக்க ஆள் இருந்தால் நல்லாதான் இருக்கும்!

    ReplyDelete