Pages

Wednesday, March 26, 2014

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி 



மகளுக்கும் தாய்க்கும் இடையில் காதலன்.

மகள் தாயை மறந்து காதலன் பின் சென்று விட்டாள்.

தலைவி, தலைவனோடு சென்று விட்டாள் .

தாய் கிடந்து தவிக்கிறாள்.  எல்லா இடத்திலும் தேடிவிட்டாள் . எங்கும் காணவில்லை.

என்னை விட்டு போய் விட்டாளா என்று கலங்குகிறாள்.

தன் மகள் உபயோகப் படுத்திய பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றும், அந்தத் தாய்க்கு தன் மகளை நினைவு படுத்துகிறது.

வருவோர் , போவோர் எல்லோரையும் பார்த்து கண் கலங்குகிறாள்....என் மகளைப் பார்த்தீர்களா, என் மகளை பார்த்தீர்களா என்று கேட்டு பரிதவிக்கிறாள்.

அந்தத் தாயின்  பரிதவிப்பை, வீட்டை விட்டுப் போன மகளின் பிரிவை இந்தப் பாடல் பதிவு  செய்கிறது.

பாடல்


இதுவென் பாவை பாவை யிதுவென் 
   அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் 
   பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை 
   காண்டொறுங் காண்டொறுங் கலங்க 
   நீங்கின ளோவென் பூங்க ணோளே.





பொருள்

இதுவென் பாவை பாவை = பாவை என்றால் விளையாட்டு பொம்மை. எது என் மகளின் பொம்மை. பாவை என்ற சொல்லுக்கு பெண் என்றும் ஒரு பொருள் உண்டு.

 இது என்று = இது என்று

அலமரு நோக்கி =  அலமந்து நோக்கி.

 நலம் வரும் = நல்லன வரும்

சுடர் நுதற் = ஒளி பொருந்திய நெற்றி

பைங்கிளி யெடுத்த பைங்கிளி = கிளி போன்ற என் மகள்  எடுத்து வளர்த்த பைங்கிளி 

 யென்றிவை = என்று இவைகளை

காண்டொறுங் காண்டொறுங் = காணும் போதும் காணும் போதும்

 கலங்க = நான் கலங்கும் படி

நீங்கின ளோ  = என்னை விட்டு நீங்கினாளோ

வென் பூங்க ணோளே.= என்னுடைய  பூப் போன்ற கண்ணை உடைய என் மகளே.


பிள்ளைகளுக்கு இதை பள்ளிகளில் பாடமாக சொல்லித் தர வேண்டும். 

1 comment:

  1. நம் பிள்ளைகள் படிக்கவோ, மனம் முடித்தோ சென்று விட்டாலும், நாம் இப்படித்தான் கலங்குவோம்.

    ReplyDelete