Pages

Thursday, March 27, 2014

சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று

 சுந்தர காண்டம் - ஊடல் தீர்வுற்று 


அனுமன் மகேந்தர மலையில் இருந்து புறப்பட்டு விட்டான். அவன் கிளம்பிய நேரத்தில் மலை கிடுகிடுத்தது.

அந்த அதிர்வு விண்ணுலகம் வரை எட்டியது.

அங்கே......

தேவ மாதர்கள், மது அருந்தி தங்கள் துணைவர்களோடு ஊடல் கொண்டு இருந்தனர். இந்த அதிர்வினால், அவர்கள் பயந்து போய் , ஊடலை விட்டு, தங்கள் தங்கள் துணைவர்களை கட்டி பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் , தாங்கள் கூண்டில் இருந்து வெளியில் விட்ட கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்டனர்.

பாடல்

ஊறியநறவும் உற்ற
     குற்றமும்உணர்வை உண்ண,
சீறிய மனத்தர்,தெய்வ
     மடந்தையர்ஊடல் தீர்வுற்று
ஆறினர்,அஞ்சுகின்றார்,
     அன்பரைத்தழுவி உம்பர்
ஏறினர், இட்டு,நீத்த
    பைங்கிளிக்கு இரங்குகின்றார்.

பொருள்

ஊறியநறவும் = நறவு என்றால் மது. ஊறிய நறவு - நாட்பட்ட மது.

உற்ற குற்றமும் = அதனால் எழுந்த குற்றமும்

உணர்வை உண்ண = உணர்வை அழிக்க

சீறிய மனத்தர் = சிறந்த மனத்தை உடைய

தெய்வ மடந்தையர் = தேவ லோகப் பெண்கள்


ஊடல் தீர்வுற்று = ஊடல் தீர்ந்து

ஆறினர் = உடலும், உள்ளமும் ஆறுதல் கொண்டனர்.

,அஞ்சுகின்றார் = அச்சம் கொண்டனர்

அன்பரைத்தழுவி = அவர்கள் தத்தம் துணைவர்களைத் தழுவி

 உம்பர் ஏறினர் = விண்ணோர் தங்கள் இடம் சென்றனர்

, இட்டு,நீத்த = கூண்டில் முன்பு போட்டு வைத்து , பின் வெளியில் விட்ட

பைங்கிளிக்கு இரங்குகின்றார். = கிளி என்ன ஆயிற்றோ என்று அதற்காக வருந்தினர்.

அச்சம் ஒரு ஊடல் தீர்க்கும் வாயில்.

ஊடல். ஊடல் தீர்ந்து கூடல். அந்த கூடல் நேரத்திலும் தாங்கள் வளர்த்த கிளி என்ன ஆயிற்றோ என்று கவலைப் படும் உயிர்களின் மேல் நேசம்.

கிளிக்காக கவலைப் படும் எவ்வளவு மென்மையான மனமாக  இருக்க வேண்டும் ?



1 comment:

  1. புன்முறுவலை வரவழைக்கும் ஜொள்ளுப் பாடல்!

    "உம்பர் ஏறிய" என்றது ஏன்? அவர்கள் எங்கு இருந்தனர்?

    ReplyDelete