கம்ப இராமாயணம் - சிறிது இது என்று இகழாதே
சிலர் இருக்கிறார்கள் - என்ன கேட்டாலும் "அது ஒன்றும் பிரமாதமில்லை, எனக்கு அவனைத் தெரியும், எனக்கு இவனைத் தெரியும், நானாச்சு உனக்கு உதவி செய்ய, இறங்கு இதில் " என்று நம்மை இழுத்து விட்டு விடுவார்கள். பின் வெளியே வரத் தெரியாமல் கிடந்து தள்ளாடுவோம்.
இப்படி உசுபேத்தி உசுபேத்தி விட்டே உடம்பை இரணகளமாய் ஆக்கி விடுவார்கள்.
நல்ல நண்பர்கள் நமக்கு தகுந்த புத்திமதி சொல்லி, நாம் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வழி சொல்வார்கள்.
அனுமன், கடலைத் தாண்டுகிறான். செல்லும் வழியில் தேவர்கள் அவனுக்கு அறிவுரை தந்தார்கள்....
"அகத்தியர் குடித்த கடல்தானே என்று அலட்சியமாக இருந்து விடாதே. எச்சரிக்கையோடு இரு." என்று அவனுக்கு அறிவுரை பகர்ந்தனர்.
அனுமனும் அதை கேட்டுக் கொண்டான்.
பாடல்
'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி' என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான்.
பொருள்
'குறுமுனி = குள்ள முனிவர் , அகத்தியர்
குடித்த வேலை = வேலை என்றால் கடல். குடித்த கடல்
குப்புறம் கொள்கைத்து = பாய்ந்து கடக்க வேண்டியது
ஆதல் = ஆதல்
வெறுவிது; = மட்திக்கத் தகாதது
விசயம் வைகும் = வெற்றி குடியிருக்கும்
விலங்கல்-தோள் = மலை போன்ற தோள்களில்
அலங்கல் வீர! = மாலை அணிந்த வீரனே
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; = இந்த கடல் என் ஆற்றலுக்கு சிறிது என்று அதை இகழாமல்
நீ சேறி' = நீ செல்வாய்
என்னா, = என்று
உறு வலித் துணைவர் சொன்னார்; = வலிமை உடைய நண்பர்கள் சொன்னார்கள்
ஒருப்பட்டான், = அதை சரி என்று ஒப்புக் கொண்டான்
பொருப்பை ஒப்பான். = மலையை போன்ற ஆற்றல் கொண்ட அனுமன்
நண்பர்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும்.
அது ஒரு புறம் இருக்க, அப்படிப்பட்ட நண்பர்களை நாம் தேர்ந்தெடுத்து கைக் கொள்ள வேண்டும்.
நாம் துன்பத்தில் இருக்கும் போது , எதையாவது சொல்லி நம்மை மேலும் துன்பத்தில் இழுத்து விடும் நண்பர்கள் பற்றி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு புறம் எச்சரிக்கையும், இன்னொரு புறம் ஊக்குவிப்பும் கலந்து சொல்வது நன்றாக இருக்கிறது. எதைச் செய்தாலும் சும்மா "செய்யாதே" என்று தடுத்துக்கொண்டே இருப்பதும் தவறல்லவா?
ReplyDelete"Nothing ventured, nothing gained" எந்த பழமொழியும் நினைவு கூறத் தகும்.