திருக்குறள் - சொல்லின் கண் சோர்வு
ஒருவனுக்கு ஆக்கமும், கேடும் எப்படி வருகிறது ?
அவன் பேசும் பேச்சால் வருகிறது.
யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்றெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும்.
ஆக்கமும் கேடும் சொல்லின் சோர்வால் வரும் என்பதால் அதை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.
பாடல்
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
பொருள்
ஆக்கமுங் = ஆக்கமும்
கேடும் = கேடும்
அதனால் வருதலால் = அதனால் வருவதால்
காத்தோம்பல் = காத்து ஓம்புதல் வேண்டும்
சொல்லின்கட் சோர்வு. = சொல்லில் ஏற்படும் சோர்வு
மேலோட்டமான பொருள் இதுதான்.
சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் பொருள் விரியும்.
முதலாவது,
நல்ல சொற்களால் ஆக்கம் வரும்
தீய சொற்களால் தீமை வரும்.
எனவே நல்லதைச் சொல்லி, தீயதை விலக்க வேண்டும்.
இரண்டாவது,
சோர்வு எப்போது வரும் ? ஒரு வேலையை அளவுக்கு அதிகமாக செய்தால் சோர்வு வரும். அல்லது செய்யத் தெரியாமல் செய்தால் சோர்வு வரும். எனவே, அதிகம் பேசக் கூடாது, பேசத் தெரியாமல் பேசக் கூடாது.
மூன்றாவது,
சோர்வு என்ற சொல்லுக்கு மறதி என்று ஒரு பொருள் உண்டு. முன்பு என்ன சொன்னோம் என்று மறக்காமல் பேச வேண்டும். இல்லை என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏளனத்திற்கு உள்ளாக நேரிடும்.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே
என்பது பிரபந்தம். (பெரியாழ்வார் பாசுரம்)
நான்காவது,
சோர்வு என்ற சொல்லுக்கு, சலிப்பு என்று பொருள் உண்டு. அதிகம் பேசினால் பேசுபவருக்கு மட்டும் அல்ல கேட்பவருக்கும் சலிப்பு வரும்.
ஐந்தாவது,
ஓம்புதல் என்றால் என்ன ? ஓம்புதல் என்ற சொல்லுக்கு காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல் என்று பல அர்த்தங்கள் உண்டு.
சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். ஒரு சொல்லை சொல்வதற்கு முன்னால் அது சரியானதுதானா என்று சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். மிக ஆழமான வார்த்தை.
வெற்றியும் தோல்வியும் நாம் உபயோகப் படுத்தும் சொற்களில் உள்ளது.
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச பழக வேண்டும்.
அது வெற்றிக்கு வழி வகுக்கும்.
அப்பா, ஒரு ஒன்னரை அடிக்கு இவ்வளவு அர்த்தமா?!
ReplyDelete