சுந்தர காண்டம் - சுவர்க்கமும் மோட்சமும்
சுவர்க்கம் வேறு, மோட்சம் வேறா ?
சொர்கத்திற்கு போனால் மோட்சம் அடைந்த மாதிரிதானே ? இல்லையா ?
இல்லை.
சொர்க்கம் வேறு. வீடு பேறு என்பது வேறு.
சொர்க்கம் தாண்டி வீடு பேறு .
இந்தக் கருத்தை கம்பர் சுந்தர காண்டத்தில் கொண்டு வந்து வைக்கிறார்.
அனுமன், மகேந்தர மலையில் இருந்து கிளம்பி விட்டான். அவன் தாவிய வேகத்தில் அந்த மகேந்திர மலை அப்படியே மத்து போல சுழன்றது. அது எப்படி இருக்கிறது என்றால் பாற்கடலை கடைந்த போது மேரு மலையை மத்தாக வைத்து கடைந்தார்களே, அது போல மகேந்திர மலை மத்துபோல சுழன்றது. அந்த சமயத்தில், புலன்களை வென்ற முனிவர்கள் சொர்கத்தை அடைந்தார்கள்.செய்ய வேண்டிய கர்மங்களை முழுமையாக முடிக்காததால், உடலின் மேல் கொண்ட பாசம் விடாததால், விண்ணுலகம் செல்வாரை ஒத்து இருந்தார்கள்.
பாடல்
‘கடல்உறுமத்துஇது’ என்னக்
கருவரை திரியும் காலை,
மிடல்உறுபுலன்கள் வென்ற
மெய்த்தவர் விசும்பின் உற்றார்;
திடல்உறுகிரியில் தம்தம்
செய்வினைமுற்றி, முற்றா
உடல்உறு பாசம்வீசாது,
உம்பர்செல்வாரை ஒத்தார்.
பொருள்
‘கடல்உறுமத்துஇது’ = கடலில் உள்ள மத்து இது
என்னக் = என்று
கருவரை = கருமையான வரை. வரை என்றால் மலை. இங்கே மகேந்திர மலை
திரியும் காலை = சுழலும் வேளையில்
மிடல் உறு புலன்கள் = மிடல் என்றால் வலிமையான.வலிமையான புலன்களை
வென்ற = வென்ற
மெய்த்தவர் செய்த = உண்மையான தவம் புரிந்த முனிவர்கள்
விசும்பின் உற்றார் = விண்ணை அடைந்தவர்கள்
திடல்உறு கிரியில் = மேடு பள்ளம் நிறைந்த மலையில்
தம்தம் = தாங்களுடைய
செய்வினை முற்றி = செய்கின்ற வினைகள் முடிந்து
முற்றா = இன்னும் முடியாத
உடல்உறு பாசம்வீசாது = உடலின் மேல் கொண்ட பாசம் விலகாது
உம்பர்செல்வாரை ஒத்தார் = விண்ணுலகம் செல்பவரை ஒத்து இருந்தார்கள்.
வினை முற்றியதால் சுவர்க்கம் போக முடிந்தது.
பாசம் விடாததால் - முக்தி, மோட்சம் அடைய முடியவில்லை.
நல்ல வினைகள் காரணமாக சொர்க்க போகம் கிடைக்கும்.
பற்றற்று இருந்தால் முக்தி கிடைக்கும்.
சொர்க்கம் தாண்டி ஒரு இடம் இருக்கிறது. அது தான் வீடு பேறு . முக்தி. மோட்சம். அதை வாலி வதையிலும் கம்பன் சொல்லுவன்.
"வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்"
சொர்கத்தையும் தாண்டி உள்ள உலகம். மோட்சம் அடைந்தான் என்று சொல்லாமல் சொல்கிறான்.
தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்
No comments:
Post a Comment