நீதி நூல் - பட்டினியே நல்ல மருந்து
பசித்து இருப்பது நல்லது. பசிக்காமல் இருக்கும் போது உண்பது நோய் செய்யும். அந்த நோய்க்கு மருந்து ஒன்றும் கிடையாது, பட்டினி போடுவதைத் தவிர.
சாப்பிடுவது என்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.
நினைத்த போது நினைத்ததை சாப்பிடக் கூடாது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று அறிந்து உண்ண வேண்டும். காரண காரியங்களை அறிந்து உண்ண வேண்டும்.
பாடல்
பாரண மின்றிச் சின்னாள் பசித்திருந் தாலு நன்றாஞ்
சீரண மின்றி யுண்ணும் தீனிநோய் செயும தற்கோர்
சூரண மிலைமெய்த் தன்மை துவ்வுணாத் தன்மை யேனைக்
காரண காரி யங்கள் கண்டுண்பா ரறிஞ ரம்மா.
சீர் பிரித்த பின்
பாரணம் இன்றி சில நாள் பசித்து இருந்தாலும் நல்லதாம்
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செய்யும் அதற்கு ஓர்
சூரணம் இல்லை மெய்த் தன்மைது உண்ணாத் தன்மை யேனைக்
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா
பொருள்
பாரணம் இன்றி = உணவு இன்றி
சில நாள் = சில நாள் (சில மணி நேரம் இல்லை )
பசித்து இருந்தாலும் = பசியோடு இருந்தாலும்
நல்லதாம் = நல்லதே
சீரணம் இன்றி = முன் உண்ட உணவு சீரணம் ஆவதற்கு முன்னால்
உண்ணும் = உண்ணும்
தீனி = உணவு அல்ல தீனி. தீனி என்பது விலங்குகள் உண்ணும் உணவு.
நோய் செய்யும் = நோயை உண்டாக்கும்
அதற்கு ஓர் சூரணம் இல்லை = அந்த நோய்க்கு மருந்து இல்லை.
மெய்த் தன்மைது = உண்மை உணர்ந்து
உண்ணாத் தன்மை யேனைக் = உண்ணாத தன்மையே அதற்கு மருந்து
காரண காரியங்கள் கண்டு = உண்பதற்கான காரண காரியங்களை கண்டு
உண்பார் = பின் அதுற்கு தகுந்த மாதிரி உண்பார்கள்
அறிஞர் அம்மா = அறிஞர்கள்.
காரணம் காரியம் இல்லாமல் உண்பவர்கள் மடையர்கள் என்பது சொல்லாமல் சொன்ன பொருள்.
No comments:
Post a Comment