இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென
இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அரக்கியர்கள் எல்லோரும் அவன் மேல் விழுந்து அழுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.
மண்டோதரி புலம்பலில் நாம் சோகத்தையும், வாழ்வின் நிலையாமையும், ஆறாம் பிறழ்ந்த வாழ்வின் முடிவும், விதியின் வலியும் , இறைத் தத்துவங்களையும் காண முடியும்.
இராவணன் மேல் மண்டோதரி வந்து விழுகிறாள். கடல் மேல் மின்னல் விழுந்தது மாதிரி இருந்தது என்கிறான் கம்பன்.
என்ன உதாரணம் இது ?
இராவணின் மேனி பெரிய கரிய மேனி. கடல் போல. மண்டோதரி மின்னல் போல மெலிந்து, ஒளி பொருந்தியவள் என்பது ஒரு அர்த்தம்.
கடல் மேல் மின்னல் விழுந்தால் அதைப் பின் கடலில் இருந்து பிரித்து எடுக்க முடியாது என்பது ஒரு அர்த்தம்.
மின்னல் கடல் மேல் விழுந்தால், கடலுக்கு ஒன்றும் ஆகி விடாது. ஆனால், அதே மின்னல் வேறு எதன் மேல் விழுந்தாலும் அது எரிந்து சாம்பாலாகி விடும். பெண், கணவனோடு சேர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை. மாறாக பிற ஆடவன் தீண்டினால், அவனை எரிக்கும் அவள் கற்பு. கற்பின் பெருமையை சொல்லும் அர்த்தம் இன்னொன்று.
அப்படி மண்டோதரி புலம்பும் போது வாய் இல்லாத மரங்களும் மலைகளும் அதைக் கண்டு உருகின.
பாடல்
தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்:
பொருள்
தரங்க நீர் = அலை கொண்ட நீர்
வேலையில் = கடலில்
தடித்து வீழந்தென = மின்னல் விழுந்தது போல
உரம் = வலிமை
கிளர் = பொங்கும்
மதுகையான் = இராவனைனிடம்
உருவின் உற்றனள் = உடலின் மேல் விழுந்து
மரங்களும் மலைகளும் உருக = மரங்களும் மலைகளும் உருக
வாய் திறந்து = வாய் திறந்து
இரங்கினள் = அழுதாள்
மயன் மகள் = மயனின் மகள்
இனைய பன்னினாள் = இவற்றை செய்தாள் . அதாவது பின் வரும் புலம்பலாகிய செயலைச் செய்தாள்.
பின் வரும் மண்டோதரியின் புலம்பலுக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன்.
மண்டோதரியின் வாயிலாக இராமனின் மன நிலை, கம்பனின் மன நிலை, இராவணன் மேல் மண்டோதரி கொண்ட பாசம், அத்தனையும் வெளிப் படுகிறது.
அவற்றைப் பார்ப்போம்.
கம்ப ராமாயணத்தில் ஒரு பத்தாயிரம் உவமைகள் இருக்குமா? ஒரு ஆளுக்கு எப்படித்தான் இவ்வளவு கற்பனை தோன்றியதோ?!? "எந்தரோ மகானுபாவுலு" என்று நாம் பணிவாக வணங்கத்தான் முடியும்.
ReplyDelete