இராமாயணம் - தொடரும் சூர்பனகையின் வலி
இலக்குவன், சூர்பனகையின் மூக்கையும், காதையும், முலையையும் வெட்டிய பின், சூர்பனகை வலியால் துடிக்கிறாள்.
மூக்கில் இருந்து வழியும் இரத்தத்தை துணியால் ஒத்தி எடுக்கிறாள். கொல்லன் உலையில் இருந்து வரும் நெருப்புப் புகை போல மூச்சு விடுகிறாள். கையை தரையில் ஓங்கி அடிக்கிறாள். வெட்டப்பட்ட முலைகளை கையால் பிடித்து பார்ப்பாள். உடல் எல்லாம் வியர்ப்பாள் . அங்கும் இங்கும் ஓடுவாள். இரத்தம் ஆறாகப் பெருக சோர்ந்து விழுவாள்.
பாடல்
ஒற்றும் மூக்கினை; உலை உறு
தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை, நிலத்தினில்;
இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்;
தன் பரு வலிக்காலால்
சுற்றும்; ஓடும்; போய், சோரி
நீர் சொரிதரச் சோரும்.
பொருள்
ஒற்றும் மூக்கினை = மூக்கினை ஆடையால் ஒத்தி எடுப்பாள்
உலை உறு = உலையில் இருந்து வரும்
தீ என = தீப் போல
உயிர்க்கும் = மூச்சு விடுவாள்
எற்றும் கையினை நிலத்தினில் = கையை நிலத்தில் அடிப்பாள்
இணைத் = இணையான
தடங் கொங்கை = பெரிய கொங்கைகளை
பற்றும் = கைகளால் பிடித்துப்
பார்க்கும் = பார்ப்பாள்
மெய் வெயர்க்கும் = உடல் வியர்ப்பாள்
தன் பரு வலிக்காலால் = தன்னுடைய பெருத்த வலிமையான காலால்
சுற்றும்; ஓடும்; = சுற்றி சுற்றி ஓடுவாள்
போய் = அங்கும் இங்கும் போய்
சோரி = இரத்தம்
நீர் = ஆறாகப்
சொரிதரச் சோரும் = பெருக சோர்ந்து விழுவாள்
அப்பா! இப்படி ஒரு வேதனையா?
ReplyDelete(இராமனும்) இலக்குவனும் தவறே செய்யாதவர்கள் என்று எண்ணுபவர்கள் இனிமேல் அந்த மாதிரி நினைக்க முடியாது!