பட்டினத்தார் பாடல் - நடுத் தலையில் குட்டு
பொது மகளிர்...பொருளுக்காக ஆண்களோடு அன்பாக இருப்பது போல பேசுபவர்கள்.
பொது மகள் எப்படி எல்லாம் இருப்பாள் என்று பட்டினத்தார் பட்டியல் இடுகிறார்....
நாவார இதமாகப் பேசுவார்கள்.உங்களைப் பிரிந்தால் உயிர் வாழமாட்டேன் என்று சத்தியம் செய்வார்கள். எப்போதும் உடன் இருந்து உண்பார்கள். நம் கையில் உள்ள பணம் குறைந்தால், "போய் வாரும்" என்று நடுத் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார்கள். அப்படிப் பட்ட பெண்களுக்கு தான் பெற்ற செல்வத்தையெல்லாம் கொடுத்து பின் கஷ்டப் படுவதோ தலைவிதி, இறைவா கச்சி ஏகம்பனே.....
பாடல்
நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.
பொருள்
நாவார = நாக்குக்கு இனிமையாக.உள்ளத்தில் இருந்து வரவில்லை. சொல், நாக்கில் இருந்து வருகிறது.
வேண்டும் = தேவையான
இதஞ் = இதமான சொற்களை
சொல்லுவாருனை = சொல்லுவார். உன்னை
நான்பிரிந்தால் = நான் பிரிந்தால்
சாவேன் = சாவேன்,உயிர் வாழ மாட்டேன்
என்றேயிருந் தொக்கவுண்பார்கள் = என்றே இருந்து ஒக்க (உடன்) உண்பார்கள்
கைதான்வறண்டால் = கையில் உள்ள பொருள் குறைந்தால்
போய்வாரும்= சென்று வாரும்
என்று = என்று
நடுத் தலைக்கே = நடு மண்டையில்
குட்டும் = குட்டு வைக்கும்
பூவையருக்கு = பெண்களுக்கு
ஈவார் = ஈகை புரிவார். பொருளை தானமாகத் தருவார்
தலைவிதியோ = அது அவர்களின் தலைவிதியோ
இறைவா = இறைவா
கச்சி = காஞ்சி
ஏகம்பனே = எகாம்பரேஸ்வரனே
விலை மகளிர் எப்படியும் போகட்டும்.
ஒரு ஆண், மனைவியைத் தவிர்த்து இன்னொரு பெண் பின் ஏன் போகிறான் ?
- இதமான சொல்
- கூட அமர்ந்து உண்பது
- நீ இன்றி நான் இல்லை என்று அன்பொழுகப் பேசுவது
இவை அவனுக்கு வேண்டி இருக்கிறது. அன்பான பேச்சும், அவளின் அன்யோன்யமும் வேண்டி இருக்கிறது.
அது எங்கு கிடைக்கிறதோ அங்கு போகிறான் - தவறு என்று தெரிந்தும்.
பாடலைப் படிக்கும் போது பாடமும் படிப்போம்
இது என்ன வாதம்? அப்படி பார்த்தால், ஒரு பெண்ணும் இப்படியே சொல்லி, எங்கே அன்பான பேச்சும், அன்னியோன்னியமும் கிடைக்கிறதோ அங்கே போகலாம் அல்லவா?!?!
ReplyDelete