ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே
அது ஒரு கடற்கரை கிராமம்.
தலை வருடும் காற்று, செவி வருடும் அலை ஓசை. பரந்து பட்ட மணல் வெளி.
அவளை விட்டு அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் போன வழி பார்த்து அவள் காத்து இருக்கிறாள். அவன் ஞாபகமாக அவன் ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. ஒரு கடிதம், ஒரு சாக்லேட் பேப்பர், ஒரு பேனா என்று ஒன்றும் தந்து விட்டுச் செல்லவில்லை.
அவன் நினைவாக அவளிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான்....அவன் தேர் சென்ற வழித் தடம். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் நினவு அவளை வாட்டும்.
அந்த வழித் தடத்திருக்கும் வந்தது ஆபத்து.
அவள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வழிகளில் உள்ள நண்டுகள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலையும் போது , தலைவன் சென்ற அந்த வழித் தடத்தின் மேலும் நடக்கின்றன.
அவள் பதறுகிறாள் .
நண்டிடம் சொல்லுகிறாள், நண்டு தயவுசெய்து அந்த தேர் தடத்தின் மேல் நடந்து அதை அழித்து விடாதே என்று அந்த நண்டிடம் வேண்டுகிறாள்.
பாடல்
கொடுந்தா ளலவ ! குறையா மிரப்பே
மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப - னெடுந்தேர்
கடந்த வழியையெங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ.
பொருள்
கொடுந்தா ளலவ ! = வளைந்த கால்களை உள்ள நண்டே
குறையா மிரப்பே = என்னுடைய குறையை உன்னிடம் கூறி வேண்டுகிறேன்
மொடுங்கா வொலி = ஒடுங்கா ஒலி. நிற்காமல் வரும் அலை ஓசை
கடற் சேர்ப்ப = கடற்கரையின் தலைவன்
னெடுந்தேர் = நெடுந்தேர். நீண்ட தூரம் சென்ற தேர். அவளை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று விட்டான்.
கடந்த வழியை = சென்ற வழியை
யெங் கண்ணாரக் காண = என் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ = அவற்றின் மேல் நடந்து சிதைக்காதே நீ
மலரினும் மெல்லியது காமம் என்றார் வள்ளுவர்.அந்த மென்மையான காதலை இங்கே காணலாம்.
"கண்ணாரக் காண" - என்ன ஒரு வருடும் வார்த்தை!
ReplyDeleteஅருமையான பாடல். பிரிவையும், தவிப்பையும் கற்பனையோடு கலந்து ஒரு சேரக் கூறும் பாடல்.
நன்றி.