கம்ப இராமாயணம் - அன்பு செய்த பிழை
மூக்கையும், காதையும் மற்றும் முலையையும் அறுக்கும் அளவுக்கு சூர்பனகை செய்த பிழைதான் என்ன ?
அவ்வாறு அறுபட்ட சூர்பனகை வலியில் துடிக்கிறாள். துவள்கிறாள். அண்ணனை அழைக்கிறாள். தனக்கு நேர்ந்த துன்பத்தை வாய் விட்டு அழுது அரற்றுகிறாள். அந்த வனத்தில், கேட்பார் யாரும் இல்லை.
அப்போது, அங்கு இராமன் வருகிறான்.
இராமனிடம் முறையிடுகிறாள்.
இராமனின் முகத்தைப் பார்த்து, வயற்றில் அடித்துக் கொண்டு, கண்ணீரும் இரத்தமும் ஒழுகி , அவை நிலத்தை சகதியாக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சொல்வாள், அந்தோ, உன் திருமேனி மேல் அன்பு செய்த ஒரு பிழையால் நான் பட்ட பாடை கண்டாயா என்று அவன் காலில் விழுந்தாள்.
சூர்பனகை மொத்தம் செய்தது அந்த ஒரு பிழைதான். இராமன் மேல் அன்பு கொண்டாள் . அவனை அடைய ஆசைப் பட்டாள்.
அவ்வளவுதான்.
பாடல்
'வந்தானை முகம் நோக்கி,
வயிறு அலைத்து, மழைக் கண்ணீர்,
செந் தாரைக் குருதியொடு
செழு நிலத்தைச் சேறு ஆக்கி,
அந்தோ! உன் திருமேனிக்கு
அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய்! யான் பட்டபடி
இது காண்' என்று, எதிர் விழுந்தாள்.
பொருள்
'வந்தானை = வந்த இராமனை
முகம் நோக்கி = அவன் முகத்தைப் பார்த்து
வயிறு அலைத்து = வயிற்றில் அடித்துக் கொண்டு
மழைக் கண்ணீர் = மழையே கண்ணீராக கொட்ட
செந் தாரைக் = சிவந்த நீர் அருவி. அதாவது, இரத்தம் அருவி போல கொட்டுகிறது.
குருதியொடு = இரத்தத்தோடு
செழு நிலத்தைச் சேறு ஆக்கி = நல்ல நிலத்தை சேறாக்கி
அந்தோ! = ஐயோ
உன் திருமேனிக்கு = உன் திருமேனிமேல்
அன்பு இழைத்த = அன்பு வைத்த
வன் பிழையால் = பெரிய பிழையால்
எந்தாய்! = என் தந்தை போன்றவேன்
யான் பட்டபடி = நான் பட்டவைகளை அப்படியே
இது காண்' = இதைப் பார்
என்று = என்று
எதிர் விழுந்தாள் = அவன் முன் விழுந்தாள் .
சூர்பனகையை பொறுத்த வரை , அவள் செய்த ஒரே பிழை இராமன் மேல் அன்பு வைத்தது.
பின் இராமன் சூர்பனகையை விசாரிக்கிறான், அடுத்து இலக்குவனை விசாரிக்கிறான். பின் நடந்தது என்ன ?
பார்ப்போம்.
சூர்ப்பனை தவறு செய்ததால் அவளை இலக்குவன் தண்டித்தான் என்று மட்டுமே படித்திருக்கிறோம். அதன் பின்னால் இவ்வளவு உணர்ச்சிகளா?! மனதைப் பிழியும் பாடல்.
ReplyDelete