இராமாயணம் - பகை என்ற சொல்லே இல்லாத இராவணன்
இலக்குவனனால் மூக்கும், காதும், முலையும் வெட்டப்பட்ட சூர்பனகை இராமனிடம் வந்து முறையிடுகிறாள்.
இராமனுக்கு அவள் யார் என்றே தெரியவில்லை.
முதலில் வரும் போது அழகான பெண்ணாக வந்தவள் இப்போது அரக்கி வடிவில், உடல் அவயங்கள் எல்லாம் அறுபட்டு இரத்தம் வழிய நிற்பதைப் பார்த்த பின் இராமனுக்கு அவளை யார் என்றே தெரியவில்லை.
நீ யார் என்று கேட்கிறான்..."உன் மேல் அன்பு வைத்த பாவம் அன்றி வேறு ஒன்றும் செய்யாதவள் " என்று சூர்பனகை கூறிய பின்னும்.
சூர்பனகைக்கு மேலும் கோபம் வருகிறது...
"என்னை நீ அறிய மாட்டாயா ? யாருடைய சீற்றத்தைக் கண்டால் இந்த உலகம் அனைத்தும் பயந்து அவன் முன் எதிர்த்து நிற்கப் பயபடுமோ, எவன் இலை போன்ற கூறிய வேலை உடையவனோ, எவன் விண்ணுலகம் உட்பட அனைத்து உலகையும் உடையவனோ அந்த இராவணின் தங்கை " என்றாள் .
பாடல்
அவ் உரை கேட்டு, அடல் அரக்கி,
'அறியாயோ நீ, என்னை?
தெவ் உரை என்று ஓர் உலகும்
இல்லாத சீற்றத்தான்;
வெவ் இலை வேல் இராவணனாம்,
விண் உலகம் முதல் ஆக
எவ் உலகும் உடையானுக்கு
உடன்பிறந்தேன் யான்' என்றாள்.
பொருள்
அவ் உரை கேட்டு = அந்த உரையைக் கேட்டு. "நீ யார்": என்று இராமன் கேட்ட அந்த உரையைக் கேட்டு
அடல் அரக்கி = சண்டை போடும் அரக்கி
'அறியாயோ நீ, என்னை? = என்னை நீ அறிய மாட்டாயா ?
தெவ் உரை = பகை என்ற சொல்
என்று = என்று
ஓர் உலகும் இல்லாத = ஒரு உலகிலும் இல்லாத
சீற்றத்தான் = கோபம் கொண்டவன். அவன் கோபத்தைக் கண்டால், அவன் முன் பகை கொண்டு நிற்க யாரும் அஞ்சுவார்கள்
வெவ் இலை= இல்லை போன்ற
வேல் இராவணனாம் = வேலைக் கொண்ட இராவணன்
விண் உலகம் முதல் ஆக = விண்ணுலகம் தொடங்கி
எவ் உலகும் உடையானுக்கு = அனைத்து உலகையும் உடையவனுக்கு
உடன்பிறந்தேன் யான்' என்றாள்.= உடன் பிறந்தவள் நான்
ஒரு புறம் வலி. இன்னொரு புறம் அவமானம். இன்னொரு புறம் இராமனை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம், ஆதங்கம். இதற்கு நடுவில் "நீ யார்" இராமனே கேட்ட வலி.
இத்தனைக்கும் நடுவில் நிற்கிறாள் சூர்பனகை.
அப்போதும் அவள் தன் அண்ணனின் பெருமையை மறக்கவில்லை. அவன் பெருமை பேசுகிறாள்.
இராமன் அடுத்து என்ன செய்தான் ?
No comments:
Post a Comment