இராமாயணம் - வருவது நாள் அன்றி வராது
கம்பன் விதியை மிக ஆழமாக நம்புபவன்.
எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்று பல இடங்களில் சுட்டிக் காட்டுக்கிறான்.
விதியை எதிர்ப்பேன் என்று புறப்பட்ட இலக்குவன் கூட பின்னாளில் சீதை அவனை இராமனைத் தேடித் போ என்று அனுப்பியபோது விதியை நொந்து, நம்பி போனான் என்று காட்டுவான்.
இங்கே , சூர்பனகை இராவணனிடம் சொல்லுகிறாள்.
நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சீதை கிடைக்க நீ இத்தனை காலம் காத்து இருக்க வேண்டி இருந்தது. பெரிய பெரிய தவம் செய்யும் முனிவர்களுக்குக் கூட விதிப் படித்தான் எல்லாம் நடக்கும். எனவே, கவலைப் படாதே, உன் தவப் பயன், நீ இன்று சீதையை அடையப் போகிறாய்.
அவள் அழகை இரண்டு கண்ணால் இரண்டு கையால் அனுபவிக்க முடியாது. உங்கக்குத் தான் இருபது கண்களும்,இருபது கைகளும் இருக்கின்றதே. நீ அவளின் அழகை முழுவதும் அனுபவிக்க முடியும் என்று கூறுகிறாள்.
பாடல்
“தருவது விதியே என்றால்,
தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘
பொருள்
“தருவது விதியே என்றால் = மனிதனுக்கு நல்லதும் அல்லாததும் தருவது விதிதான்
தவம் பெரிது உடையரேனும் = பெரிய பெரிய தவங்கள் செய்தவர்களுக்குக் கூட
வருவது வரும் நாள் அன்றி, = என்று நல்லவை வர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அந்த நாள் இன்றி
வந்து கைகூட வற்றோ? = முன்னால் கிடைக்காது
ஒருபது முகமும் = பத்துத் தலைகளும்
கண்ணும் = கண்களும்
உருவமும் = உருவமும்
மார்பும் = பரந்த மார்பும்
தோள்கள் இருபதும் = இருபது தோள்களும்
படைத்த செல்வம் = நீ பெற்றதன் பயன்
எய்துவது = அடைவது
இனி நீ, எந்தாய்! = இப்போது, என் தந்தை போன்றவனே
இந்த இருபது தோள்களும், இருபது கண்களும் பெற்றதன் பயன் , சீதையின் அழகை அனுபவிக்கத்தான் என்று கூறுகிறாள்.
முருகனை காண
"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே " என்று அருணகிரியார் வருந்தினார்.
இருபது கண்களைக் கொண்டு அவளின் அழகை அள்ளிப் பருகு என்று அவனை தூண்டுகிறாள் சூர்பனகை.
No comments:
Post a Comment