திருக்குறள் - தவறு செய்த பின் ....
பாடல்
எற்றென் றிரங்குவசெய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.
சீர் பிரித்த பின்
எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன்
மற்று அன்ன செய்யாமை நன்று
"ஐயோ என்ன தவறு செய்து விட்டோம்" என்று நினைத்து வருந்தும்படியான தவறுகளை ஒருவன் செய்யக் கூடாது. ஒரு வேளை அவ்வாறு செய்து விட்டால், அதை நினைத்து இரங்காமல் இருக்க வேண்டும்"
சற்றே சிக்கலான குறள். முதல் பாதி சரியாகப் புரிகிறது. தவறு செய்யக் கூடாது என்கிறார்.
தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.
அது வள்ளுவருக்கும் தெரியும்.
எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை தருகிறார்.
அந்த விடையில் தான் சிக்கல். உரை எழுதிய பெரியவர்கள் வேறுபட்ட உரைகளைத் தருகிறார்கள். அனைத்தையும் தொகுத்துத் தருகிறேன்.
சரி என்று படுவதை எடுத்துக் கொள்ளுங்கள்.
பரிமேல் அழகர் சொல்கிறார் - செய்த தவறுக்காக இரங்கக் கூடாது என்று. அதற்கு அவர் சொல்லும் காரணம், முதல் வரியில்
எற்றென் றிரங்குவசெய்யற்க
எற்று என்று இரங்குவது செய்யற்க என்று வருகிறது. பின்னால் மற்றன்ன செய்யாமை நன்று என்பதில் வரும் மற்று என்ற வார்த்தை முன்னால் வரும் "இரங்கத் தக்க செயல்களையே " குறிக்கும்.
ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.
அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு எதையும் சாதிக்க பயன்படாது.
இது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.
மனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.
பாவ மன்னிப்பு, கங்கையில் சென்று நீராடுதல், காசி போன்ற புனித தலங்களுக்குப் போதல் போன்றவை பாவத்தில் இருந்து விடுதலை தரும் என்று மதங்கள் போதிக்கின்றன.
இன்னொரு அர்த்தம் - மணக்குடவர், தேவநேய பாவணர் போன்றோர் கூறியது.
மற்றன்ன செய்யாமை நன்று என்றால் - அது போல மீண்டும் தவறுகளைச் செய்யக் கூடாது என்பதாகும்.
மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது
நாம் இரண்டையும் எடுத்துக் கொள்வோமே ....
மீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.
மற்றன்ன செய்யாமை நன்று.......
சிந்திக்க வேண்டிய தொடர்
இவ்விரண்டு உரைகளும் இன்னும் பலவும் சொன்னாலும் அனைத்திற்கும் இடமளிக்கும் அற்புதம் தமிழ்!
ReplyDelete