Pages

Sunday, July 20, 2014

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்  


குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்ல பொருள் வேண்டும்.

அதே சமயம், கணவனும் கூடவே இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் அல்லாடும் இரண்டு பிரச்சனைகள் இவை. சங்க காலம் முதல் இன்று வரை இதற்கு ஒரு வழி தோன்றவில்லை.

பொருளும் வேண்டும், கணவனும் கூடவே இருக்க வேண்டும்...என்னதான் செய்வாள் அவள்.

அவர்கள் காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். அவளை செல்வ செழிப்போடு சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்காக வெளிநாடு சென்று பொருள் திரட்ட நினைக்கிறான்.

அவளுக்கோ, அவன் வெளிநாடு எங்கும் போகாமல், அவள் கூடவே இருக்க வேண்டும் என்று ஆவல்.

தன் தோழியிடம் சொல்கிறாள்.

பாலை நிலத்தில் கானல் நீர் தெரியும். அதை உண்மையான நீர் என்று நினைத்துக் கொண்டு யானைகள் கால் வெடிக்க ஓடி, பின் தளர்ந்து விழும். அது போல,  என் காதலன் பொருள் தேடி சென்று வாழ்வின் உண்மையான இன்பங்களை  இழக்க மாட்டான் என்று கூறுகிறாள்.

பாடல்

கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப்
பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய் !
தொடியோடி வீழத் துறந்து.

பொருள்

கடிதோடும் = வேகமாக ஓடும்

வெண்டேரை  = கானல் நீரை

நீராமென் றெண்ணிப் = உண்மையான நீர் என்று எண்ணி

பிடியோ டொருங்கோடித் = பிடியோடு ஒருங்கு ஓடி = பெண் யானைகளோடு ஒன்றாக ஓடி

தாள் பிணங்கி வீழும் = கால்கள் (தாள்) தளர்ந்து வீழும்

வெடியோடும் = வெடிப்புகள் நிறைந்த

வெங்கானஞ் = வெம்மையான கானகம் 

சேர்வார்கொ னல்லாய்  ! = சேர்வார் என்று எண்ணாதே

தொடியோடி = தொடி என்றால் வளையல். வளையல் கழன்று ஓடி

வீழத் துறந்து = விழும்படி (என்னைத் ) துறந்து. என்னை விட்டு விட்டு

பொருள் என்பது கானல் நீர் போல. அதைத் தேடி தேடி திரியும்போது வாழ்கை முடிந்து  போகிறது. பொருள் எல்லாம் சேர்த்து வைத்த பின் , அனுபவிக்கலாம் என்றால்  அதற்குள் வயதாகி விடுகிறது. 

காலம் காலமாய் தொடரும் சிக்கல் இது. 

அவன் அவளை விட்டுப் பிரியப் போகிறான் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள்  உடல் மெலிந்து வளையல் கழண்டு கீழே விழுந்து உருண்டு  ஓடி விடுமாம். 

அந்த வளையல் உருண்டோடும் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா ?


1 comment:

  1. மாதக் கணக்கில் வெளிநாடு செல்லும் software engineer-களின் நினைவு வருகிறது. கேரளாவில் இருந்து, அரபு நாடுகள் செல்லும் வேலையாளரின் நினைவு வருகிறது. என்ன செய்வது? பிழைப்புத் தொல்லை அந்த நாளில் இருந்தே இப்படித்தான்! அருமையான பாடல்.

    ReplyDelete