Pages

Saturday, July 5, 2014

இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...

இராமாயணம் - வலிமை இல்லாத அரசனின் குடிகள் போல...


கவந்தன் என்ற அரக்கன் உள்ள வனத்தை இராமனும் இலக்குவனும் அடைந்தார்கள்.

கவந்தன் இருக்கும் கானகத்தில் உள்ள உயிர்கள் எப்படி வருந்தின என்பதற்கு கம்பர் ஒரு உவமை சொல்கிறார்.

வலிமை இல்லாத ஒரு அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு வருந்துவார்களோ அப்படி அந்த விலங்குகள் வருந்தின என்கிறார்.

வலிமை இல்லாத அரசன் இருந்தால், அந்த நாட்டு மக்களுக்கு பல விதங்களில் இன்னல் விளையும்.....

உள்ளூர் தாதாக்களால் ஒரு புறம் துன்பம், அரசாங்க அதிகாரிகள் தரும் குடைச்சல் மறுபுறம், அயல் நாட்டவர் தரும் துன்பம் இன்னொரு புறம், மழை தண்ணி இல்லாமல் வரும் வறட்சி போன்ற துன்பங்களை சரி வர கவனிக்காமல் அதனால் வரும் துன்பங்கள் என்று பலவிதங்களில் துன்பம் அனுபவிப்பார்கள்.

அது போல அந்த கானகத்து விலங்குகள் தவித்தன என்றார்....

பாடல்

மரபுளி நிறுத்திலன், 
     புரக்கும் மாண்பிலன், 
உரன் இலன் ஒருவன் நாட்டு 
     உயிர்கள் போல்வன; 
வெருவுவ, சிந்துவ, 
     குவிவ, விம்மலோடு 
இரிவன, மயங்குவ, 
     இயல்பு நோக்கினர்.

பொருள்

மரபுளி நிறுத்திலன் = ஒரு அளவில் நிறுத்த இயலாதவனும் 

புரக்கும் மாண்பிலன் = காப்பாற்றும் மாண்பு இல்லாதவனும்

உரன் இலன் = வலிமை இல்லாதவனுமான

ஒருவன் = ஒரு அரசனின்

நாட்டு உயிர்கள் போல்வன = நாட்டில் வாழும் உயிர்கள் போல

வெருவுவ,= பயந்து

சிந்துவ = சிதறி ஓடி

குவிவ = கும்பல் கும்பலாய் சேர்ந்து 

விம்மலோடு இரிவன = துன்பத்தோடு ஓடி

மயங்குவ = மயங்கி

இயல்பு நோக்கினர். = அந்த இயல்பை அடைந்தன

மரபும், அன்பும், வலிமையையும் இல்லாத அரசனின் கீழ் உள்ள குடிகள் எவ்வாறு எல்லாம்  துன்பப்படும் என்று கம்பர் சொல்கிறார். பயந்து  ஓடுவார்கள்,, சிதறிப் போவார்கள், கும்பல் சேர்வார்கள், துன்பப் படுவார்கள் , என்ன செய்வது என்று அறியாமல்   மயங்குவார்கள்....அது போல அந்த கானகத்து  விலங்குகள் துன்பப் பட்டன. 


No comments:

Post a Comment