திருவாசகம் - இனி எங்கே போவது ?
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து
குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நினைந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனினை தந்து, வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே, நான் உன்னை தொடர்ந்து
அது ஒரு கைக் குழந்தை. அதற்குப் பசிக்கிறது. ஆனால், "எனக்குப் பசிக்கிறது, பால் தா" என்று சொல்ல இன்னும் பேச்சு வரவில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் அழுகை ஒன்றுதான்.
அழுதால் அம்மா வந்து பால் தருவாள் என்று நினைத்து, அது வாய் திறந்து அழத் தொடங்குமுன் தாய் ஓடி வது பால் தருவாள்.
பிள்ளை அழுத பின் தருவோம் என்று இருக்க மாட்டாள். குழந்தைக்கு இப்போது பசிக்கும் என்று தாய்க்கு தெரியும்.
"பால் நினைந்து ஊட்டும் தாய் ".
இப்போதெல்லாம் , குழந்தை அழுதாலும் தாய் பால் தருவது இல்லை....அழகு குறைந்து விடும் என்று. மாணிக்க வாசகர் சொல்லும் தாய், வேறு தாய்.
அப்படிப் பட்ட தாயினும்
"சாலப் பரிந்து" . சால என்றால் மிகுதியாக. சால, உறு , தவ, நனி, கூர், கழி என்பன பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல். மிகுதி என்பதை குறிக்கும் பல சொற்கள்.
அது என்ன தாயை விட அன்பு செய்து ? அதெப்படி இறைவன் தாயை விட அன்பு செய்ய முடியும் ?
பின்னால் சொல்கிறார்.
தாய் உடலுக்கு உணவு தருவாள். இறைவன் உடலுக்கு மட்டும் அல்ல, நமக்குள் இருக்கும் உள் ஒளியையும் பெருக்குவான். உயிருக்கு உறுதி செய்வான்.
பாவியேனுடைய ஊனினை உருக்கி
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று சொன்னவர், அடுத்த வரியில் ஊனினை உருக்கி என்கிறார். ஊன் எப்போது உருகும் ? சரியாக சாப்பிடாவிட்டால் உடல் மெலியும். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அன்பு என்றால் நிறைய உண்ணத் தருவது என்று. அல்ல.
மணிவாசகரின் ஊன் உருகியது....அதனால் என்ன ஆனது ?
உள் ஒளி பெருக்கி
உள்ளே உள்ள ஒளி பெருகியது. ஒளி முதலிலேயே இருக்கிறது. அதை பெருக்குபவன் இறைவன். உள் ஒளி தந்து என்று சொல்லவில்லை. உள் ஒளி பெருக்கி என்கிறார். எரியும் சுடரை தூண்டி விடுவது போல.
உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து
உலப்பு என்றால் அழிவு, முடிவு, இறுதி. உலப்பு இலா என்றா முடிவு இல்லாதா, அழிவு இல்லாத என்று பொருள். இல்லை இல்லாத ஆனந்தம். கரை காண முடியா இன்பம்.
புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
இறைவன் எங்கே இருக்கிறான் எங்கே இருக்கிறான் என்று வெளியில் எல்லாம் தேடுகிறோம். கோயில் , குளங்கள், புண்ணிய தலங்கள் என்று எல்லா இடத்திலும் தேடுகிறோம். மணி வாசகரும் தேடினார்.கடைசியில் இறைவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார். இறைவனைப் பிடித்து விட்டார்.
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்;
நான் உன்னை தொடர்ந்து வந்து இறுக்கி பிடித்துக் கொண்டேன்.
எங்கு எழுந்தருளுவது, இனியே?
இனி வேறு எங்கும் போக முடியாது. இறுதியில் தனக்குள்ளேயே இறைவனை கண்டார். வேறு எங்கும் போக முடியாதபடி இறைவன் அவருக்குள்ளேயே எழுந்தருளினான்.
ஒவ்வொரு வரியும் இனிமைதான். ஆனால், "புறம் புறம் திரிந்து சிக்கெனப் பிடித்தேன்" என்று படிக்கும்போது முகத்தில் ஒரு புன்முறுவல்!
ReplyDeleteநன்றி.
"இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்"
ReplyDeleteVery nice Blog..
ReplyDeletePlease continue the Good Work !!