சிலப்பதிகாரம் - வினை விளை காலம்
மற்ற காப்பியங்களில் இருந்து சிலப்பதிகாரம் வித்தியாசப்பட்டது.
இதன் கதாநாயகன் கோவலன். கதாநாயகனுக்கு உரிய பெரிய வலிமையான குணங்கள் எதுவும் கிடையாது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து இருந்தது.
நடன மாதைக் (மாதவி) கண்டு சபலப் படுகிறான். அவள் பின்னே போகிறான். சொத்தை அழிக்கிறான்.
மானம் தாங்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான்.
சாதாரண நடுத்தர வீட்டு குடும்பத் தலைவன் போல, மனைவியின் நகையை விற்கப் போகிறான். போன இடத்தில் பொற் கொல்லானால் காட்டிக் கொடுக்கப்பட்டு (தவறாக) வெட்டுப்பட்டு உயிரை விடுகிறான்.
பெரிய பலசாலி இல்லை. பெரிய நண்பர்கள் கிடையாது. சாதாரண மனிதன். பலவீனன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்கிறான். அவள் காலைத் தொடுகிறான். செய்த செயலுக்கு வருந்துகிறான்.
இப்படிப் பட்ட ஒரு சாதாரண மனிதனை சுற்றி பிணையப்பட்ட கதை.
இளங்கோ அடிகள் விதியை நம்புகிறார்.
வாழ்கை விதியின் வழிப்படி செல்கிறது. தனி மனிதன் அதை ஒன்று செய்ய முடியாது என்று சொல்லிச் செல்கிறார்.
கோவலன் மாதவியைக் கண்டது, அவள் மேல் மனதை பறி கொடுத்தது, கண்ணகி அதை கண்டிக்காமல் விட்டது, அவர்கள் மதுரை சென்றது, அந்த நேரத்தில் அரசியின் கொலுசு காணாமல் போனது, அதை அறியாமல் கோவலன் தன் மனைவியின் கொலுசை விற்கச் சென்றது, பாண்டிய மன்னன் விசாரிக்காமல் கொலை செய்யச் சொன்னது....எல்லாம் விதியின் போக்கு.... யார் என்ன செய்திருக்க முடியும் என்பது போல கதை செல்கிறது.
மிக மிக வித்தியாசமான கதை.
அந்தக் கதையில்...
காவலர்கள் அரசனிடம் , அரசியின் கால் சிலம்பை களவாடிய கள்வன் கிடைத்து விட்டான் என்று சொல்ல, தீர விசாரிக்காமால், அவனைக் கொன்று அந்த சிலம்பி கொண்டு வாருங்கள் என்று சொல்கிறான்.
பாடல்
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
பொருள்
வினைவிளை கால மாதலின் = வினை விளைகின்ற காலம் ஆதலின்.
யாவதும் = ஆவதும்
சினையலர் வேம்பன் = சினை என்றால் கிளை. கிளையில் பூத்த வேப்பம் பூவின் மாலையை அணிந்த பாண்டியன்
தேரா னாகி = ஆராயாமல்
ஊர் காப்பாளரைக் கூவி = ஊர் காவலனைக் கூப்பிட்டு
ஈங்கென் = இங்கு என்
தாழ் பூங்கோதை = மனைவியின்
தன்காற் சிலம்பு = கால் சிலம்பை
கன்றிய கள்வன் = திருடிய கள்வன்
கைய தாகில் = கையில் இருந்தால்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் = (அவனைக்) கொன்று சிலம்பை கொணர்க இங்கு என்றான்.
சற்று உன்னிப்பாக கவனித்தால், வார்த்தைகள் வாழ்கையை புரட்டிப் போட்டது விளங்கும்.
கன்றிய கள்வன் கையதாகில் = சிலம்பு அவன் கையில் இருந்தால் என்பது ஒரு அர்த்தம். திருடிய அந்த கள்வன் உங்கள் கையில் (அகப்பட்டு ) இருந்தால் என்பது இன்னொரு அர்த்தம்.
கொன்றச் சிலம்பு கொணர்க = கொன்ற என்பது கொண்ட என்று இருந்திருந்தால் , அவன் கொண்ட சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள் என்று அர்த்தம் வரும். கொன்ற சிலம்பு கொணர்க என்றால் அவனை கொன்று அந்த சிலம்பை கொண்டு வாருங்கள் என்று அர்த்தம் கொள்வது அவ்வளவு சரியாக இருக்காது.
எது எப்படியோ, வார்த்தைகள் தடம் மாறி, கோவலன் வாழ்க்கை பறி போனது.
அதற்கு காரணம் விதி விளையும் காலம் என்று விதி தான் காரணம் என்கிறார் இளங்கோ அடிகள்.
வேறு எப்படிதான் இதை விளக்குவது ?
No comments:
Post a Comment