திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே
பெண்ணாசை மனிதனை விடாமல் துரத்துகிறது.
அருணகிரியானாதர் பதறுகிறார்.
பெண்களின் மார்புகள் எமனின் படை என்று பயப்படுகிறார்.
பெண்களின் பின்னால் சென்று மருளும் எனக்கு அருள்புரிவாய் என்கிறார்.அதுவும், இன்புற்று , அன்புற்று அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.
சந்தனம் பூசிய, மணம் வீசும் பெண்கள். அவர்களின் மார்புகள் எமப் படை. அவர்களின் கண்களில் இருந்து என்னை காப்பாய். அவர்கள் கூந்தலில் மலர்களை சூடி இருக்கிறார்கள். அந்த பூக்களில் வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. அந்த கரிய கூந்தலில் மயங்கி விழும் என்னை காப்பாற்றி அருள் புரிவாய்.
திருமாலின் மருகனே. சிவனின் மகனே எனக்கு அருள் புரிவாய்.
பாடல்
பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற் குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.
சீர் பிரித்த பின்
பரிமள களப சுகந்த சந்த தன மானார்
படை எமப் படையென அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி நிரை முரல் கொங்கும் கங்குல் குழலாலே
மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே
அரி திருமருக கடம்பத் தொங்கல் திருமார்பா
அலை குமு குமு என வெம்பக் கண்டித்து எறிவேலா
திரிபுர தகனம் வந்திக்கும் சற் குருநாதா
ஜெய ஜெய ஹர ஹர செந்திற் கந்தப் பெருமாளே.
பொருள்
பரிமள = மணம் வீசும்
களப = கலவை (சந்தனம், ஜவ்வாது போன்ற பொருள்களின் கலவை )
சுகந்த = நறுமணம் வீசும்
சந்த = அழகிய
தன = மார்புகள்
மானார் = பெண்கள்
படை எமப் படையென = அவர்கள் கொண்ட படை எமனின் படைப் போல உயிரை வாங்குபவை
அந்திக்கும் = இணையும்
கண் கடையாலே = ஓரக் கண்ணாலே
வரி = வரி உள்ள
அளி = வண்டுகள்
நிரை முரல் = ரீங்காரம் இடும்
கொங்கும் = வாசனை உள்ள
கங்குல் = கரிய
குழலாலே = முடியாலே
மறுகிடும் = உருகிடும்
மருளனை = மருள் கொண்ட என்னை
இன்புற்று = இன்பத்துடன்
அன்புற்று = அன்பு கொண்டு
அருள்வாயே = அருள் புரிவாயே
அரி = திருமால்
திருமருக = மருமகனே
கடம்பத் தொங்கல் = கடம்ப மாலை அணிந்த
திருமார்பா = மார்பை உடையவனே
அலை = கடலில் அலை
குமு குமு என = குபு குபுவென
வெம்பக் = கொதிக்க
கண்டித்து = அதைக் கண்டித்து
எறிவேலா = வேலை எறிந்தவனே
திரிபுர = முப்புரங்களை
தகனம் = எரித்த சிவன்
வந்திக்கும் = வணங்கும்
சற் குருநாதா = குருநாதா
ஜெய ஜெய ஹர ஹர = வெற்றி வெற்றி
செந்திற் கந்தப் பெருமாளே.= திருச்செந்தூரில் வாழும் பெருமாளே
இப்படி சந்தத்துடன் பொருள் நிறைந்து ஒரு பாடலா?!
ReplyDelete