சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 3
பாடல்
அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்
பொருள்
அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே
யாவையுமாய் = அனைத்துமாய்
அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்
சோதியனே = சோதி வடிவானவனே
துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே
தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே
ஆதியனே = முதலானவனே
இறுதியானவனே = நடுவானவனே
நடுவாகி = நடுவானவனே
அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே
ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை
ஆட்கொண்ட = ஆட்கொண்ட
எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே, பெரியவனே
கூர்த்த = கூர்மையான
மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்
கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்
வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.
அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.
"அன்பருக்கு அன்பனே"
அன்பர்களுக்கு அன்பானவன்.
சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?
தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.
ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?
அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.
கற்கண்டு எப்படி இருக்கும் ?
இனிப்பாய் இருக்கும்.
அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.
நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.
அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.
அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.
இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.
இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?
நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
என்பார் திருஞானசம்பந்தர்.
----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------
யாவையுமாய் அல்லையுமாம்
இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய்
அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.
எது என்ன புதுக் குழப்பம் ?
எல்லாம் அவன் என்பது புரிகிறது.
அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?
ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?
சிந்திப்போம்.
அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப் பார்ப்போம்.
‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'
அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும் உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன்.
தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.
இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை.
தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண் இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.
அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.
அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.
சிலையில், படத்தில் அவனை வணங்கலாம்.
ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி இருக்கிறான்.
இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.
அவை அன்றியும் அவனை நினைப்பது.
யாவையுமாய் அல்லையுமாய்
மேலும் சிந்திப்போம்
-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------
சோதியனே துன் இருளே
ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி உண்மையை அறிய உதவும்.
ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த இருள் (துன் இருள்)
ஜோதி அறிவு , ஞானம் என்றால்
இருள் என்பது அஞ்ஞானம் என்று ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ?
மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு.
இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான் செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு.
அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.
சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல்.
இறைவன் தான் சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக் கூடாது ?
இதற்கு சரியான விடை இல்லை.
நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது.
நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது.
இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம்.
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.
என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர் சொல்லுவார்.
இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...
இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
என்றார்.
இருள் சேரும், இரு வினையும் சேராது.
அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக அறிந்து கொள்வது ?
அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி வெளிப்படும்.
மேலும் சிந்திப்போம்
"நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது." This is crazy. Then the fundamental question is why create evil and pain?
ReplyDeleteAs Epicurus said:
“Is God willing to prevent evil, but not able?
Then he is not omnipotent.
Is he able, but not willing?
Then he is malevolent.
Is he both able and willing?
Then whence cometh evil?
Is he neither able nor willing?
Then why call him God?”