இராமாயணம் - அங்கதன் தூது - இராவணன் செய்த பிழைகள்
மாற்றான் மனைவியை கவர்ந்த ஒரு பிழை தான் இராவணன் செய்தானா ? வேறு ஒரு பிழையுமே செய்யவில்லையா ?
இலக்குவன் பட்டியல் போடுகிறான்
சீதையை சிறையில் வைத்தான்
தேவர்களுக்கு துன்பம் செய்தான்
பூமியில் உள்ள நலவர்களுக்கு துன்பத்தை தந்தான்
உயிர்களை கொன்று தின்றான்
பேராசையினால் உலகம் அனைத்தையும் தானே ஆண்டான்
இந்திரனின் செல்வங்களை கவர்ந்து கொண்டான்
பாடல்
‘தேசியைச் சிறையில் வைத்தான்;
தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
வழி அலா வழிமேல் செல்வான்.
பொருள்
‘தேசியைச் = ஒளி பொருந்தியவளை (சீதை)
சிறையில் வைத்தான்;= சிறையில் வைத்தான்
தேவரை இடுக்கண் செய்தான் = தேவர்களுக்கு துன்பம் செய்தான்
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் = பூவுலகில் உள்ள நல்லவர்களுக்கு துன்பத்தைத் தந்தான்
மன்னுயிர் புடைத்துத் தின்றான் = உயிர்களை புடைத்துத் தின்றான்
ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையினால்
எல்லா உலகமும் தானே ஆள்வான் = மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரமால், தானே ஆண்டான்
வாசவன் திருவும் கொண்டான் = இந்திரனின் செல்வங்களைப் எடுத்துக் கொண்டான்
வழி அலா வழிமேல் செல்வான் = வழி அல்லா வழி மேல் சென்றான்
சொல்லுக்குப் பொருள் பார்த்தாகி விட்டது.
அதன் உள் இருக்கும் அர்த்தத்தை பார்க்க வேண்டாமா ?
இராவணனின் அழிவு ஏன் வந்தது ?
அதற்கு முன்னால் , இராமாயணம் என்ற காவியம் எப்படி காலங்களை தாண்டி நிற்கிறது.
அது ஒரு கதை என்று எடுத்துக் கொண்டால், அப்படி ஒன்றும் பிரமாதமான கதை இல்லை. கதா நாயகனின் மனைவியியை வில்லன் கவர்ந்து சென்று விட்டான். கதாநாயகன் வில்லனை அழித்து தன் மனைவியை மீட்டான். இதுதான் கதை. இதில் என்ன பிரமாதம் இருக்கிறது.
இராமாயணம் காலம் கடந்து நிற்பதற்கு காரணம், அது வாழ்க்கைக்கு வேண்டிய அறங்களை எடுத்துச் சொல்லுவதால்.
இராமாயணம் முழுவதும் திருக்குறளைப் பார்க்கலாம்.
இராவணன் ஏன் அழிந்தான் ?
மற்றவர்களுக்கு கேடு நினைத்தான், அதனால் அழிந்தான்.
இராவணன், தேவர்களுக்கு கெடுதல் நினைத்தான். மண்ணில் உள்ள நல்லவர்களுக்கு கெடுதல் நினைத்தான். அனைத்து உயிர்களுக்கும் கெடுதல் நினைத்தான்.
அவனை அறம் அழித்தது.
ஒரு அரசனின் செல்வத்தை, பெருமையை அழிக்க எதிரிகள் வேண்டாம். அவனுடைய குடிமக்கள் துன்பப் பட்டு ஆற்ற முடியாமல் அழுதால் அதுவே செல்வத்தை தேய்க்கும் படை என்றார் வள்ளுவர்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
தேவர்களும், நல்லவர்களும், மற்றைய உயிர்களும் அழுத கண்ணீர் அவன் செல்வத்தை தேய்த்தது
வழி அல்லாத வழியில் சென்றான் என்றார் கம்பர்.
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
என்பார் மணிவாசகர்.
நெறியல்லா நெறி என்பது தீ நெறி.
No comments:
Post a Comment