திருக்குறள் - மலரினும் மெல்லிது காமம்
அவனுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் சொல்லி அவளோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று ஒரே பரபரப்பாக வருகிறான். வீட்டிற்கு வந்தால் மனைவிக்கு தலைவலி, உடம்பு சரியில்லை. அவன் முகம் வாடிப் போகிறது.
இன்னொரு நாள், மனைவியோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவளருகில் போகிறான். அல்லது கணவனோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவள் அவன் அருகில் போகிறாள். திடீரென்று குழந்தை அழுகிறது.
மனம் வாடிப் போகும் அல்லவா ?
இப்படி காமத்தை அனுபவிப்பதற்கு இடம், காலம், இருவரின் மன நிலை, உடல் நிலை , சுற்று சூழல் என்று எல்லாம் பொருந்தி வர வேண்டும். இதில் ஏதோ ஒன்று குறைவு பட்டாலும், அந்த காமம் சுவைக்காது.
பாடல்
மலரினும் மெல்லிது காமம்; சிலர், அதன்
செவ்வி தலைப்படுவார்.
பொருள்
மலரினும் = மலரை விட
மெல்லிது = மென்மையானது
காமம்; = காமம்
சிலர், = வெகு சிலரே
அதன் = அதனை
செவ்வி = அறிந்து
தலைப்படுவார் = அனுபவிப்பார்கள்
சரி, இதுக்கும், முதலில் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?
மலர் மென்மையானது. சட்டென்று வாடிவிடும் தன்மை கொண்டது.
சூடு அதிகமானால் வாடும், சூடு குறைந்தாலும் கருகி விடும், நீர் இல்லை என்றால் வாடும், நீர் அதிகமானால் அழுகி விடும்.
காமம் அதை விட மென்மையானது.
மலர் வாடுவதற்கு சில காரணங்கள் என்றால், காமம் வாடுவதற்கு பல காரணங்கள் உண்டு. எனவே,காமம், மலரை விட மென்மையானது.
மலரின் வாழ்நாள் மிகக் குறைந்தது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் இருக்கும்.
காமம் அதைவிட குறைந்த வாழ் நாள் கொண்டது. ஒரு கணத்தில் மறைந்து விடும்.
கணவனோ மனைவியோ நல்ல மன நிலையில் என்றால் மற்றவரின் காமம் அந்த நொடியில் மறைந்து விடும்.
இதில் முக்கியமானது என்னவென்றால், இதை வெகு சிலரே அறிவார்கள் என்கிறார் வள்ளுவர்.
பொதுவாக, கணவனோ மனைவியோ மற்றவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல் தங்கள் உணர்சிகளுக்கு வடிகால் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்.
காலம், இடம், சூழ்நிலை, மற்றவரின் மனநிலை என்று அனைத்தையும் கருத்தில் கொண்டு காமத்தை அனுபவிப்பவர்கள் வெகு சிலரே.
மற்றவர்கள், என் தேவை பூர்த்தியானால் போதும் என்று நினைப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சிந்திப்போம்
தனது சுகம் மட்டும் கருதாமல், தன துணையின் தேவையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது போல இருக்கிறது.
ReplyDelete