தேவாரம் - கண்டறியாதன கண்டேன்
கண்டேன் என்ற சொல், ஒரு ஆச்சரியத்தோடு பார்பதை குறிப்பது.
கண்டேன் கற்பினுக்கு அணியினை என்றான் அனுமன் இராமாயணத்தில். சந்தோஷம், ஆச்சரியம், வியப்பு இவை எல்லாம் கலந்தது கண்டேன் என்ற அந்தச் சொல்.
நாவுக்கரசர் உலகைப் பார்க்கிறார். உலகம் எங்கும் இறைவனும் இறைவியும் ஒன்றாக இருப்பது போல தெரிகிறது அவருக்கு.
எதைக் கண்டாலும் இறைவனும் இறைவியும்தான் தெரிகிறது.
இளம் பிறையை தலையில் சூடியவரும் , வளையல் அணிந்த உமா தேவியோடு ஒன்றாக இருப்பவருமான அவரை , அன்று பூத்த மலர்களைத் தூவி என் தோள்கள் குளிரும் வண்ணம் தொழுவேன். பூங்குயில் பாடும் திருவையாறில் சேவல் தன் துணையான கோழியோடு வருவதைக் கண்டேன். இதுவரை கண்டு அரியாதனவற்றையெல்லாம் கண்டேன். அவனுடைய திருப்பாதங்களை கண்டேன்.
பாடல்
பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
பொருள்
பிறையிளங் கண்ணியி னானைப் = இளம் பிறையை சூடிய அவனை
பெய்வளை யாளொடும் பாடித் = வளையல் அணிந்த உமா தேவியோடும் கூடி இருப்பதைப் பாடி
துறையிளம் பன்மலர் தூவித் = நீர்த் துறையில் மலர்ந்த மலர்களை தூவி
தோளைக் குளிரத் தொழுவேன் = என் தோள்கள் குளிரும் படி தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் = இளம் குயில் பாடும் (ஆலும் = பாடும் )
ஐயா றடைகின்ற போது = திருவையாறை அடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் = இளமையான பெண் ஜோடியோடு
சேவல் வருவன கண்டேன் = சேவல் வருவதைக் கண்டேன்
கண்டே னவர் திருப்பாதங் = கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறி யாதன கண்டேன்.= கண்டறியாதன கண்டேன்
கோழியும் சேவலும் ஒன்றாக திரிவதை இதற்கு முன்னாலும் பார்த்து இருக்கிறார்.
ஆனால் அதன் அர்த்தத்தை அறிய வில்லை.
இப்போது, அதை அறிந்தார்.
"கண்டு அறியாதன கண்டேன்" என்றார்.
உலகம் அனைத்துமே அவளும் அவனுமாக இருப்பதை கண்டு அறிந்தேன் என்கிறார்.
மனங் குளிர சிந்தை குளிர;-
ReplyDeleteஇவற்றிற்குப் பதிலாக தோளைக் குளிர என்பது எதற்காக.
கம்பர் சொற்களை பாவிப்பதில் திறமை கொண்டவர்.
அது போல இறையருள் பெற்றவகள் பாடலில் சொற்கள்
பாவிக்கப்பட்ட முறையில் சிறப்பிருக்க வேண்டுமே.
தோள் குளிர என்ற பதத்தைப் படித்தபோது எனக்கும் இந்த கேள்வி எழுந்தது. சரியான பொருள் ஒன்றும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்களேன். நன்றி.
Deleteதங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுது, அழகிய தமிழை எவ்வளவு இழந்துவிட்டோம் என்று மனம் கலங்குகிறது.
ReplyDeleteநன்றி.
ஒரு குளத்தில் முழுகி எழுந்திருக்கும்போது நம் தோள்கள் குளிர்கின்றன.
ReplyDelete