இராமாயணம் - மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன்
கார்காலம் முடிந்து விட்டது. சீதையை தேட துணை செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்புகிறான் சுக்ரீவனிடம்.
மிக மிக கோபத்தோடு கிளம்புகிறான் இலக்குவன்.
இராமனும் இலக்குவனும் இருப்பது ஊருக்கு வெளியே.சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு போகும் பாதை தெரியாது இலக்குவனுக்கு. குத்து மதிப்பாகத் இந்த திசையில் இருக்கும் என்று தெரியும்.
மிகுந்த கோபத்தோடு சுக்ரீவன் இருக்கும் திசை நோக்கிச் செல்கிறான்.
வழியில் எதிர்பட்ட மரங்களும், மலைகளும் தவிடு பொடியாகின. பொடி ஆனது மட்டும் அல்ல, அந்த பொடிகள் மிகுந்த தூரத்தில் சென்று சிதறி விழுந்தன.
இலக்குவன் எப்போதும் உண்மையின் வழியில் நடப்பவன். இன்று அண்ணனின் ஆணையை ஏற்று வரும் வழியில் உள்ள மலைகள் எல்லாம் தவிடு பொடியாகும் படி செல்கிறான்.
பாடல்
மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான்.
பொருள்
மாறு நின்ற மரனும் = வழியில் நின்ற மரங்களும்
மலைகளும் = மலைகளும்
நீறு சென்று = தூள் தூளாகி
நெடு நெறி நீங்கிட = நீண்ட தூரம் சென்று நீங்கி விழ
வேறு சென்றனன் = வேறு வழியில் சென்றவன்
மெய்ம்மையின் ஓங்கிடும் = உண்மையில் சிறந்திடும்
ஆறு சென்றவன் = வழியில் சென்றவன்
ஆணையின் ஏகுவான்.= அண்ணனின் ஆணையில் செல்லுவான்
No comments:
Post a Comment