Pages

Wednesday, November 19, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !


மிக மிக ஆழமான வரிகள்.

இதில் முதல் வரியைப் பார்ப்போம்.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்

"வெவ்வேறு விதமாக மாறும் இந்த உடம்பினுள் கிடக்க என்னால் முடியாது "

உங்கள் உடம்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

உங்கள் உடம்பை உங்களுக்கு பிடிக்குமா ?

தங்கள் உடலை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள் ? அந்த உடலைத் தான் எப்படி எல்லாம் பாதுகாக்கிறோம் ?

சோப்பு, பவுடர், உதட்டுச் சாயம், முடி திருத்தம், உடற் பயிற்சி, என்று இந்த உடலை எப்படி எல்லாம் மெருகு ஏற்ற முடியுமோ அப்படியெல்லாம் அழகு படுத்துகிறோம்.

இந்த உடல் மூலம்தானே நாம் அத்தனை அனுபவங்களையும் பெறுகிறோம்.

புலன் இன்பங்களை அனுபவிக்கத்தானே இந்த பாடு படுகிறோம்.

ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த உடலால் சுகமா ? இந்த சுகம் நிரந்தரமா ? இன்பம் போல் தோன்றும் இந்த இந்த இன்பம் எவ்வளவு நாள் கூட வரும் ? இதன் முடிவு என்ன ?

வயதாகும். உடல் தளரும். நினைவு தப்பிப் போகும். இருமலும் சளியும் வந்து சேரும். கண் பார்வை மங்கும். தோல் சுருங்கும். எலும்பு வளையும். காது கேட்காது. படுக்கையை விட்டு எழுந்திருப்பதே பெரிய வேலையாகிப் போகும்.

மறதி வந்து, சேர்த்து வைத்த அனுபவம் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும்.

மனைவி யார், கணவன் யார், பிள்ளை யார், பெற்றோர் யார் என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்க  வேண்டி இருக்கும்.

அருகில் நிற்பவர்கள் எல்லாம், "கால காலத்தில் போய் சேர்ந்தால் நல்லது ..." என்று சொல்லும் நாள் வரும்.

இந்த உடம்பு சுகமா ?

இந்த உடம்பு மாறிக் கொண்டே இருக்கிறது. குழந்தையாக, சிறுவன்/சிறுமியாக, குமரன்/குமரியாக, வயதாகி, கிழவன்/கிழவியாக....நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில், நோய் நொடி வந்து படுத்து விடுகிறது.

நாளும் வயதாகிக் கொண்டே இருக்கும் இந்த உடலுக்கா இந்த பாடு ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்

வேறு வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடம்பினுள் அடை பட்டு கிடக்க என்னால் முடியாது என்கிறார் மணிவாசகர். இந்த உடலை சிறையாக நினைக்கிறார். நம் உயிரை, எண்ணங்களை, நான் என்ற என்னை அடைத்து வைக்கும் சிறை இந்த உடல். நான் என்பது இந்த உடல் அல்ல என்று நினைத்தால் இந்த உடலின் பாரம் தெரியும் ?

"இங்கு யார் சுமந்து இருப்பார் இச்சரக்கை" என்பார் காளமேகம்.



முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


முதுகைப் பிடித்துக் கொண்டு, கையால் தடவி தடவி , முன்னால் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு , உடல் நடுங்கி, கண் சுழன்று, இருமலோடு, இவர் எங்க அப்பா,  பெரிசு, என்று இளையவர் திட்டுமுன் , பத்ரிநாதனை வணங்குங்கள்  என்றார் ஆழ்வார். 

உடலினுள் அடை பட்டுக் கிடக்க முடியாது  என்கிறார்.

எது அடை பட்டுக் கிடக்கிறது ? உயிரா ? ஆன்மாவா ? நினைவுகளா ?

மாறும் உடலில் மாறாமால் இருக்கும் நான் யார் ?

சின்ன பிள்ளையாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

இளைஞனாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

கிழவனாக மாறும் போதும் நான் என்று சொல்வேன்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது...நான் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

அது எது ?

உடலில் அடை பட்டு கிடைக்கவில்லை என்றால் அது எங்கு போகும் ?

அடைத்தது யார் ? விடுவிப்பது யார் ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்


2 comments:

  1. தலைப்பில் ஒரு சிறு பிழை" "பொய் கெட்டு" என்று இருக்க வேண்டும்.

    "விடக் குடம்பு" என்றால் "விஷம்" என்று பொருளோ?

    ReplyDelete
    Replies
    1. தலைப்பின் தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொண்டேன்.

      விடம் என்பதற்கு நஞ்சு என்பதுதான் நேரடியான அர்த்தம். விடம் என்பதற்கு மலை என்றும் ஒரு பொருள் உண்டு. மலை போன்ற உடல். பருத்த உடல், ஊன் பொதிந்த உடல் என்று பொருள் கொண்டிருக்கிறேன். நஞ்சு உள்ள உடல் என்பது அவ்வளவாக சரியாகப் பொருந்தவில்லை என்பது என் எண்ணம்.

      Delete