Pages

Wednesday, November 19, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?


இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்ததால், சுக்ரீவன் மீது கோபம் கொண்டு இலக்குவன் அவனோடு சண்டை பிடிக்க மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானரங்கள் எல்லாம் தாரையிடம் வந்து அவளிடம் யோசனை கேட்டு நின்றன.

ஒரு பெண். ஒரு அரசை எப்படி செலுத்தி இருக்கிறாள் என்று கம்பன்  காட்டுகிறான்.

தன் முன்னால் பயந்து நடுங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து தாரை சொல்லுகிறாள்

"வாலியின் உயிரை காலனுக்குக் கொடுத்து, வற்றாத செல்வத்தை உங்களுக்குக் கொடுத்த இராமனும் இலக்குவனும் ஊருக்கு வெளியே சும்மா உட்கார்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களா ? இப்படி உதவி செய்தவர்களை புறக்கணிப்பது உங்களுக்கு தகுமா ?"

என்று அவர்களை கடிந்து கூறுகிறாள் .

பாடல்

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள்

'வாலி ஆர் உயிர்  = வாலியின் உயிரை

காலனும் வாங்க = காலன் வாங்க

விற் கோலி = வில்லை வளைத்து 

வாலிய செல்வம் கொடுத்தவர் = வற்றாத செல்வம் கொடுத்தவர் (அல்லது வாலியின் அந்த செல்வத்தை கொடுத்தவர் )

போலுமால் = அவர்கள்

உம் புறத்து = உங்கள் ஊருக்கு வெளியே

இருப்பார்! = (சும்மா) இருப்பார்கள் என்று (நினைத்து அவர்களை புறக்கணிப்பது )

இது சாலுமால் = இது சரியா ?

உங்கள் தன்மையினோர்க்கு எலாம் =உங்களைப் போன்றோருக்கு எல்லாம்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்பதும் அவர் வாக்கு.

நன்றி மறவாமையை அறமாகச் சொன்னவர்கள் நம் முன்னவர்கள்.

மேலும் சிந்திப்போம். 



No comments:

Post a Comment