பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1
பாரதியார் !
சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் பாடல்களைப் பாடியதால், அவரை ஒரு தேசியக் கவி, புரட்சிக் கவி, என்று மக்கள் இனம் கண்டார்கள்.
பெண் விடுதலைக் கவிஞர் என்றும் அறியப்பட்டார்.
அவருடைய பாடல்கள் மிக மிக எளிமையாக இருந்ததால் அவற்றில் ஒரு ஆழம் இல்லையோ என்று எண்ணியவர்களும் உண்டு. கவிதை என்றால் அதில் அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.
பாரதியாரின் அதிகம் அறியாத இன்னொரு முகம் அவரின் ஆன்மீக முகம்.
அதைக் கண்டு சிலிர்த்துப் போனேன்.
முதலில் அவரின் குரு தரிசனம் என்ற பாடல்.
மாணவன் எப்போது தயாராகி விட்டானோ அப்போது குரு அவன் முன் தோன்றுவார் என்பது நம் மத நம்பிக்கை. (when the student is ready, the Master will appear)
பாரதியார் குருவை தேடித் தவிக்கிறார்.
ஆழ்ந்த ஆன்மீக தாகம் இருக்கிறது.யாரிடம் போனால் அந்த தாகம் தீரும் என்று தவித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் முன் ஒரு குரு தோன்றினார்.அந்த குருவின் தரிசனத்தைப் பற்றி கூறுகிறார்.
என்ன ஒரு ஆழமான அருமையான கவிதை.
பாடல்
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.
சீர் பிரித்த பின்
அன்று ஒரு நாள் புதுவை நகர் தனிலே கீர்த்தி
அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில்,
இராஜா ராமையன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநி டத்தை
மொழி பெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனை வேண்டிக் கொள்ள யான் சென்று ஆங்கண்
இருக்கையிலே ...அங்குவந்தான் குள்ளச் சாமி.
பொருள்
பாரதியார் புதுச் சேரியில் இருந்த காலம். அங்கு இராஜ இராமையன் என்ற நாகை நகரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார்.அவரின் தந்தை உபநிடதங்களை தமிழில் மொழி பெயர்த்து வைத்து இருந்தார். இராஜ இராமையன், அந்த மொழி பெயர்ப்பை பாரதியிடம் கொடுத்து பிழை திருத்தித் தரச் சொன்னார்.
பாரதியும், தினமும் அதை படித்து பிழை திருத்திக் கொண்டு இருக்கும் போது , ஒரு நாள்
குள்ளச் சாமி அங்கு வந்தான்.
No comments:
Post a Comment