Pages

Thursday, February 19, 2015

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.


கோபத்தோடு வந்த  இலக்குவன் முன் தாரை வந்து நிற்கிறாள். "நீ எப்படி இராமனை விட்டு பிரிந்து வந்தாய்" என்று கேட்டாள்.

அப்படி கேட்டதும் இலக்குவனுக்கு கோபம் எல்லாம் போய் விட்டது. அண்ணனை நினைத்த உடன் சீற்றம் போய் , அருள்  வந்தது. அருளோடு தாரையைப் பார்த்தான். நிலவு போல் இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் இலக்குவனுக்கு அவன் தாயின் நினைவு வந்தது. நம் அம்மாவும் இப்படித்தானே விதைவைக் கோலத்தில் சோகமாக இருப்பாள் என்று எண்ணினான்...வருந்தினான்


பாடல்


ஆர் கொலோ உரைசெய்தார்? ‘என்று
    அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள்,
    பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை,
    இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன்,
    தாயரை நினைந்து நைந்தான்.

பொருள்

இந்த மாதிரி பாடல்களுக்கு உரை எழுதுவது, அதுவும் நான் எழுதுவது , அந்தப்  பாடலுக்கு  செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். எவ்வளவு அழகான பாடல் , எளிமையான , தெளிவான சொற்கள்,  ஆற்றொழுக்கான நடை....அடடா...

இருப்பினும், எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்...

ஆர் கொலோ = யார் அது

உரைசெய்தார்? ‘என்று = சொன்னது என்று

அருள்வர = அருள் வர

சீற்றம் அஃக = சீற்றம் விலக

பார்குலாம் = உலகுக்கு எல்லாம்

முழுவெண் திங்கள் = முழுமையான பௌர்ணமி நிலவு

பகல்வந்த படிவம் போலும் = பகலில் வந்தது போல

ஏர்குலாம் முகத்தினாளை = அழகான முகம் கொண்ட தாரையை

இறைமுகம் எடுத்து நோக்கி = தன் முகத்தை எடுத்து நோக்கி

தார்குலாம் = மலர்களால் தொடுக்கப் பட்ட 

அலங்கல் = மாலையை அணிந்த

மார்பன் =  மார்பை உடைய இலக்குவன்

தாயரை நினைந்து நைந்தான்.= தன்னுடைய தாய் மார்களை நினைத்து நைந்தான்

இந்த பாடலில் சில நுணுக்கம் உள்ளது.

கணவனை இழந்த தாரை விதவை கோலத்தில் வருகிறாள். அவளைப் பார்த்து முழு  நிலவு மாதிரி இருக்கிறாள் என்று கம்பன் வர்ணிக்கிறான். இது சரியா.  சோகத்தில் இருக்கும் பெண்ணை, விதவையான ஒரு பெண்ணை வர்ணிப்பது அவ்வளவு  சரியா என்று கேட்டால் சரி இல்லை தான்.

ஆனால், கம்பன்  அதில் நுணுக்கம் செய்கிறான்.

"முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்"

பகலில் வந்த நிலவு போல என்று கூறுகிறான்.

நிலவு தான்,

அழகு தான்,

ஆனால் அது   பகலில் வந்தால் எப்படி ஒளி குன்றி, அழகு தெரியாமல் இருக்குமோ  அப்படி இருந்தது என்கிறான்.

அதே போல இன்னொரு வரி,  இலக்குவன் மாலை அணிந்து இருந்தான் என்று சொன்னது.

"தார்குலாம் அலங்கல் மார்பன்"

அண்ணியைக் காணோம். அண்ணன் துயரத்தில் இருக்கிறான். சுக்ரீவன் சொன்ன சொல்லை  காப்பாற்றவில்லையே என்ற கோபம்.  இவற்றிற்கு நடுவில்  மாலை அணிந்து கொண்டு வருவானா ? கம்பன் எப்படி அப்படி சொல்லலாம் ?

இலக்குவன் ஊருக்குள் வரும்போது மாலை அணிந்து வரவில்லை.

அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த போது , அன்னணனின் பெயரைச் சொன்னதும்   கோபம் மாறி அருள் பிறந்த போது , விதைவையான தாரையைப்  பார்த்ததும் தன் தாயை நினைந்து வருந்திய அவனின் உயர்ந்த குண நலன்களை  பாராட்டி , அவனுக்கு கம்பன் அணிவித்த மாலை அது என்று நயப்புச்  சொல்வார்கள்.

மனைவியை பிரிந்து இருக்கிறான். வாலிபன். அழகான பெண்ணைப் பார்த்தவுடன்  மனைவின் நினைப்பு வரவில்லை. தாயின் நினைவு வந்தது என்றால்  அவனுக்கு ஒரு மாலை போட வேண்டாமா ?

அண்ணன் மேல், தாயின் மேல் அன்பு கொண்ட ஒரு பாத்திரத்தை படைத்துக்  காட்டுகிறான்  கம்பன். வருங்கால சந்ததிகள், இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு ஒரு உதாரணம்  தருகிறான்.

இவற்றை எல்லாம்  சிறு வயதில் சொல்லித் தந்தால் பிள்ளைகள் மனதில் உயர்ந்த  விஷயங்கள் எளிதில்  பதியும்.

நாமும் படிக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சொல்லித்  தரவில்லை.


1 comment:

  1. அருமையானா பாடல்தான். ஆனாலும் இப்படி உரை இல்லாவிட்டால், முழுவதும் புரிந்து ரசிக்க முடியாது. நன்றி.

    "தாயரை நினைந்து நைந்தான்" - என்ன ஒரு அழகான வரி. ஒரு தாய் மட்டும் அல்ல, தந்து மூன்று தாயரையும் நினந்தானாம். அதேபோல, "நைந்தான்" என்பது என்ன ஒரு சொற்பதம்! நான் கயிறு அல்லது ஆடை நைந்ததாகக் கேட்டிருக்கிறேன், அதுபோல நைந்தானாம்! இன்னும் கயிறு இரண்டு துண்டாகவில்லை, ஆனால் நைந்திருக்கிறது. அதேபோல ஆடை கிழியவில்லை, ஆனால் நைந்திருக்கிறது. அதேபோல இலக்குவன் இன்னும் முற்றும் ஒடிந்து போகவில்லை, ஆனால் நைந்துவிட்டானாம்! ஆஹா!

    ReplyDelete