நள வெண்பா - சேற்றில் வழுக்கிய யானைகள்
இலக்கியங்கள் நமக்கு அழகாக எழுத பேசக் கற்றுத் தருகின்றன.
நிடத நாட்டின் வளம் பற்றி கூற வருகிறார் புகழேந்தி.
ஒரு நாட்டின் வளம் பற்றி நாலு வரியில் கூற வேண்டும்.
அந்த ஊர் செல்வச் செழிப்போடு இருந்தது.
பெண்கள் எல்லாம் அழாக இருந்தார்கள்.
படை பலம் பொருந்தி இருந்தது.
மக்கள் எல்லாம் நன்றாக கல்வி கற்று இருந்தார்கள்.
கலை செழித்து இருந்தது.
கலை செழிக்க வேண்டும் என்றால், அதை பார்த்து இரசிக்க மக்கள் வேண்டும். மக்கள் கலை இரசனையோடு இருந்தார்கள்.
ஊரில் சண்டையும் சச்சரவும் இருந்தால் கலையை இரசிக்க நேரம் இருக்காது. ஊர் அமைதியாக இருந்தது.
என்று இத்தனையும் நாலு வரியில் சொல்ல வேண்டும். அதுவும் அழகாக சொல்ல வேண்டும்.
சொல்கிறார் புகழேந்தி....
பாடல்
கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்றுளதோர்
ஞானக் கலைவாழ் நகர்.
பொருள்
பெண்கள் குளிக்கும் போது குங்குமம், சந்தனம் போன்ற வாசனைப் பொருள்களை நீரில் சேர்த்துக் குளிப்பார்கள். அப்படி குளித்து விட்டு, உடை மாற்றி, அணிகலன்களை அணிந்து கொண்டு தெருவில் செல்கிறார்கள். அவர்கள் அப்படி செல்லும் போது அவர்களின் கூந்தலில் உள்ள நீர் சொட்டு சொட்டாக வடிகிறது. அப்படி வடிந்த நீர், தெருவில் உள்ள மணலோடு சேர்ந்து அதை சேறாகச் செய்கிறது. அந்தச் சேற்றில் நடந்து வந்த பெரிய கரிய யானைகள் தொப் தொப்பென்று வழுக்கி வழுக்கி விழுகின்றன. அந்த ஊரில் ஞானமும், கலையும் செழிந்து வாழ்ந்தது.
கோதை = பூ மாலை அணிந்த
மடவார் = பெண்கள்
தம் = தங்களுடைய
கொங்கை = மார்பின் மேல்
மிசைத் = அசைச் சொல்
திமிர்ந்த = பூசிய, தடவிய
சீதக் = குளிர்ந்த
களபச் = கலவை
செழுஞ்சேற்றால் = செம்மையான சேற்றால்
வீதிவாய் = வீதியின் வழியே
மானக் = பெரிய
கரி = யானைகள்
வழுக்கும் = வழுக்கி விழும்
மாவிந்தம் = மாவிந்தம்
என்றுளதோர் = என்று உள்ள
ஞானக் = ஞானம்
கலை = கலைகள்
வாழ் நகர் = வாழுகின்ற நகரம்.
யானைகள் நிறைந்த ஊர் என்பதால் ஊரின் பலம் புலப்படும்.
ஞானமும், கலையும் வாழும் ஊர்.
பிரபந்தமும் , இன்னொரு சேறு செய்வதைப் பற்றி கூறுகிறது.
திருமாலின் பெருமைகளை எண்ணி எண்ணி பக்தர்கள் கண்ணில் இருந்து ஆறாக ஓடிய நீர் திருவரங்கத்து பிரகாரங்களை நனைத்து சேறாகச் செய்து விடுமாம். அந்த சேறே என் என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் என்று உருகுகிறார் ஆழ்வார்.
பாடல்
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே
நிங்கள் செய்யும் இந்த சேவை மிகப் பெரியது. பூரண இறை அருள் கிட்டட்டும். ...
ReplyDeleteஉங்கள் சேவை தொடரட்டும்
அருமையான கற்பனைதான். தூள்!
ReplyDelete